பண்பில் குனிந்தால் வாழ்வில் நிமிரலாம்

உலகில் புகழ் பெற்ற ஆங்கில அகராதியை  வடிவமைத்தவர்  டாக்டர் சாமுவேல் ஜான்சன் ஆவார். பல்லாண்டுகள்  கடின  உழைப்பால் உருவானதே  அவ்வகராதி ஆகும். 

இதற்காக உலகின்  பல்வேறு இடங்களில் இருந்து  பாராட்டுக்கள்  தெரிவிக்கப்பட்டன. அத்துடன் அவரது முயற்சியைப்  பாராட்டி  விழாவும் நடைபெற்றது.  அவ்விழாவில்  கலந்து  கொண்ட  பலரும் சிறப்புகளை  எடுத்துக்காட்டி அவரைப்  பாராட்டினர். 

ஆனால் அச்சபையில்  இருந்த ஒரு பெண் எழுந்து அந்த அகராதியில்  இருந்த ஒரு பிழையைச்  சுட்டி  “டாக்டர் சாமுவேல்!  எப்படி இந்த தவறு  நேர்ந்தது”?.என்று  கேட்டாள்.  

இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சாமுவேல் அமைதியாக,  “ஆம்  மன்னிக்கவும். எனது கவனக்குறைவால்  அறியாமல்  இந்தத்  தவறு  நேர்ந்து  விட்டது. இதைத்  திருத்தம்  செய்து மீண்டும்  வெளியிடுகிறேன்”.  என்று  கூறினார். 

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள்,   தான் பெரும் அறிஞரான போதும் கூட  தமது தவறை  ஏற்றுக் கொண்டு திருத்திக்  கொள்கின்ற உயர்ந்த பண்பைக்  கண்டு  வியந்து புகழ்ந்தனர்.