அழிக்கப்பட வேண்டிய போலி வயவை – உணர்வின் உரையாடல்

519

சமூக வலைத்தளங்கள்… என்ன ஒரு பொருத்தப்பாடான, பொறுப்பான சொல்லாடல். வலைத்தளத்தில் நாம் வசிக்கத் தொடங்கி பல காலம் ஆச்சு. இசூழலில் வலைத்தளச் சமூகம் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த சமூக வலைத்தளங்கள் அவசியமானவை.

சமூகம் எனும் போதே எனக்கெல்லாம் பொறுப்புணர்வு வந்து வடும். அதிலும் முகநூல் என்றால் எவ்வளவு பொறுப்புணர்வு வர வேண்டும்.

எம் மனச்சாட்சிக்கும், சட்டத்துக்கும் பயப்படுகின்றோமோ இல்லையோ.. சமூகத்துக்குப் பயப்படும் இனம் எங்கள் இனம். வேற்றினத்தவன் எல்லாம் மது, மது, சூது போன்ற தகாச்செயல்களை தெனாவெட்டாக செய்ய, நாமோ ஊருக்குப் பயந்து ஒளித்து நின்று தண்ணி அடிப்பது; மறைஞ்சு புகைப்பிடிப்பது என்று இன்றும் இருக்கின்றோம் என்றால் அது சமூகத்தின் மீதான எங்கள் பொறுப்புணர்வும் அச்சமும் தான்.

புத்தகத்தை தவறுதலாகக் கீழே போட்டாலோ, தவறி தானே விழுந்தாலோ தொட்டுக் கும்பிடும் பழக்கம் எங்களுக்கானது. சமூகத்தையும் நூலையும் பெரிதும் போற்றும் நாம் சமூக வலைத் தளமான முகநூலை எப்படி எடுத்தாள்கின்றோம்.

அண்மைக்காலமாக வயவையின் பேரில் பல உருவங்கள் உலவ தொடங்கிவிட்டன. அவை உருவாகக் காரணமாக வைக்கப்படும் ஞாயவாதம் “ஊருக்கு நல்லது செய்ய”. அப்படி செய்யப்படும் “நல்லது” என்ன என்று தேடினால், எங்கள் ஊரைச் சேர்ந்தவரையே கண்டபடி திட்டுவதுதான். திட்டப்படும் நபர் சரியானவரோ தப்பானவரோ என்பதல்ல இப்போ பேசுபொருள். பொது வெளியில் இப்படி குப்பை போடுவது சரியா என்பதே,,

வீட்டுக்குள் சண்டைப்பிடிப்போம். ரோட்டுக்குக் கொண்டு வரமாட்டோம். கொண்டு வந்தால் கேடு கெட்ட குடும்பம் என்று பெயர் வந்து விடும் என்போம். ஊரும் அப்படித்தானே.. பல குடும்பங்களைக் கொண்ட கூட்டுக் குடும்பம்தானே ஊர். அந்த கூட்டுக் குடும்பச் சண்டையை பொதுவுக்கு கொண்டு வந்தால் கேடு கெட்ட ஊர் என்று வயவை பெயர் எடுத்து விடும் அல்லவோ.. “ஊருக்கு நல்லது செய்யவே புனைபெயரில் வந்து இப்படிப் பதிகிறேன்” என்பவர்கள் தங்கள் பதிவால் ஊரே துர்நாற்றம் எடுத்து, கேடு கெட்ட ஊர் என்று உலகம் சொல்லும் என்ற அபாயம் அறியாதவரா.. என்னைப் பொறுத்தவரை இப்படியானவர்கள்தான் ஊர் கெட முதன்மைக் காரணிகள்.

இப்படியானவர்களை எதிர்க்கின்றோம்; வேரறுக்கின்றோம் என்று பதிலாடும் பண்பாளர்கள் ஊரின் பேர் கெட இரண்டாவது காரணி.

இப்படியே அவன் தான்.. இவன் தான்.. என்று சொல்லிக் கொண்டு, இதை நிறுத்த வழி சொல்லாமல் இருக்கிற என்னைப் போன்றவர்கள் மூன்றாவது காரணி..

அதானே இதுக்கு என்னதான் வழி?

சகிப்புத் தன்மையுடனான புறக்கணிப்பு.. இது ஒன்றுதான் குற்றத்தை குறைக்கக் கூடிய மிகச் சிறந்த தண்டனை.

முகம் காட்டாமல் ஊரின் பேரில் வருகின்ற, போலி முகங்களை எங்களை விட்டுத் தள்ளி வைக்க வேண்டும். அவர்கள் விடுக்கும் நட்பு அழைப்பை நிராகரிக்க வேண்டும். அவர்களின் பதிவுகள் மீது கண்கள் பாயக் கூடாது. ஒட்டு மொத்தத்தில் இந்தப் போலிகள் தனிமைப் படுத்தப்படல் வேண்டும். அப்படிச் செய்வோமானால் இப்போலிகள் தானாகவே அழிந்து விடும்.

நான் பார்த்த மட்டில் கெட்டது செய்றான் என்று சாடப்படுபவன் உண்மை முகத்தோடு நிற்கிறான். சாட்டுபவன் பொய் முகத்தோடு நிற்கிறான். எங்களுக்குப் பொய் வேண்டாம். உண்மையே வேணும்.

எனவே..  பொய் முகத்தோடு புதிதாய் இணைபவர்களை புறந்தள்ளுவோம். போலி முகத்தோடு ஏற்கனவே இணைந்தவர்களை நட்பு வட்டத்திலிருந்து விலத்தி விடுவோம். ஊர் போற்றி வாழ நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இதுவே.

-மயூரன் கணேசலிங்கம்

1 COMMENT

  1. அழகான ஊரை அழகாக அசிங்கப்படுத்தும் எல்லோருக்கும் ஒரு அதிரடி பதிவு.தங்கள் கருத்தை சொல்லும் யார் என்றாலும் தங்கள் கருத்தை தங்களை அடையாளப்படுத்தி பதிவிட்டால் அவர்களுடன் கதைத்து அவர்களின்கருத்துக்கும் மதிப்பளிக்கலாம், ஊர் எல்லோருக்கும் சொந்தமானது. ஒ ரு குடும்ப சொத்தோ தனி நபர் சொத்தோ அல்ல. இதில் யார் யாரையும் தாக்குவதாலோ ஆரவளிப்பதாலோ குழப்புவதாலோபயனேதும் இ்லை

    • மதிப்பளிப்போம்’ செயல்படுவோம்.