அக்பர் சக்கரவர்த்தி வெளியில் கிளம்பும் போது விநாயகர் படத்தைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம். அப்படிப் பார்த்து விட்டுப் போவதால் நல்லது நடக்கும் என்பது அக்பரின் நம்பிக்கை.
ஒரு நாள் அக்பர் வெளியில் போகும் போது சேவகன் ஒருவன் முன்னால் வந்துவிட்டான். அக்பர் மனதில் சங்கடத்துடன் வெளியில் சென்றார்.
அன்று அக்பர் பல பிரச்சினைகளைச் சந்தித்தார். சேவகனைக் முகத்தில் முழித்து விட்டு வெளியில் வந்ததால்தான் இவ்வளவு பிரச்சினை என்று அக்பர் அபிப்பிராயம் கொண்டார். கோபம் அடைந்தார். சேவகனுக்கு மரண தண்டனை விதித்தார்.
இதனைக் கேள்வியுற்ற பீர்பால் அரசனைக் காண வந்தார். அரசன் விடயத்தை விளக்கியதும் பீர்பால் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. அக்பர் குழப்பத்துக்கான காரணத்தைக் கேட்டார்.
சேவகன் முகத்தில் நீங்கள் முழித்ததால் உங்களுக்குப் பிரச்சினைகள்தான் வந்தது. ஆனால் அரண்மனைக்குள் வரும்போது உங்கள் முகத்தில் முழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே. மக்கள் உங்களை அபசகுனமாகக் கருதுவரே.. என்ன செய்வது என்ற ஆழ்வில் இருந்தேன் என்றார்.
அக்பர் தெளிந்தார். சேவகனின் மரண தண்டனையை இரத்துச் செய்தார்.