புனர் ஜென்மம்

284


ஐந்து மணி அலாரம்
அவசரக் காலைக்கடன்
கிணற்றடிக் குளியல்
நீ போட்டுக்கொடுத்த டீ
புறப்பட்டாச்சு
புல்லில் இன்னும் பனித்துளி

37B – அரைமணிப் பயணம்
திரு.வி.க. நகர்
மளிகைக்கடை
ஷட்டரைத் திறந்து
ஊதுபத்தி ஏற்றி
வந்தாச்சு முதல் கஸ்டமர்

அனைவர்க்கும் அவசரம்
சீக்கிரம்.. எத்தனை நேரம்ப்பா?
முதலாளியின் அதட்டல்
பொட்டலம், பார்சல்
போனில் ஆர்டர்

அலைச்சல் -உள்ளே வெளியே
ஆறு கைகள் இருந்தால்?
அவ்வப்போ டீ..
மதியச்சாப்பாடு?
ம்ஹும்..முடியாது – நேரமில்லை!

வேர்வை, மளிகை நெடி
தும்மல், கமறல்
பத்துமணி நேரம் நின்ற
கணுக்காலில் விண்,..விண்..

பத்துமணி..
கடைச்சாத்தல்
மீண்டும் பயணம்..
இரவுக்காற்றிலும் வாகனச் சூடு
உட்கார இடமில்லாமல்
மக்கள் கூட்டம்..
மீண்டும் வேர்வை..

சின்னக்குளியல்..
துவைத்த வேட்டி-துண்டு
இரவுச்சாப்பாடு
இட்லி-சாம்பாருக்கு என்னா சுவை
கதை சொல்லி முதுகு தட்டி
கண்ணுங்க தூங்கியாச்சு

எலும்பெல்லாம் வலி
இரும்பாய் கனம்..அசதி..
அருகில் நீ
அமைதியில் வீடு..வீதி..

தன்னைப்போல் பக்கம் நகர்ந்து..
கொஞ்சநேரம் மென்குரலில் பேசிக்கொண்டு
என் நெற்றி நீ கோத
கண்ணைச் சொருகி பாதிவிழிப்பில்…

பகல் பட்ட கஷ்டமெல்லாம்
பறந்தே போச்சு.
நாளையைச் சந்திக்க
நல்ல தெம்பு கூடிப்போச்சு..

வாழ்க்கையைப் பகிர
வழித்துணையாய் கூட வர
நேசத்தைக் கொடுத்து வாங்க
நீ இருக்குற புள்ள…
நெஞ்சு பொங்குது உள்ள..

ஏன்னா
சேர்ந்தது உடம்புங்க இல்ல
ரெண்டு மனசுங்க