நாளொரு குறள் பொருளுடன் – 87

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :7

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தோம்பல் ஒரு வேள்விதான். என்று பலரும் இதற்கு பொருள் சொல்ல ஆரம்பிக்கும்பொழுது சொல்வார்கள். ஆனால் அதற்கு மேல் சொல்லும் பொழுது கொஞ்சம் தடுமாறுவார்கள். விருந்தினனின் தகுதிக்கேற்ப பலன். விருந்தின் தகுதிக்கேற்ப பலன் என மழுப்பி விடுவார்கள்.

ஒரு வேள்வி செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என ஒரு வரையறை உண்டு. புத்திரன் வேண்டி செய்யும் வேள்வி, செல்வம் வேண்டி செய்யும் வேள்வி, பலம் பெருக்கிக் கொள்ள செய்யும் வேள்வி, நாடுகளை வெல்ல செய்யும் வேள்வி என ஒவ்வொரு வேள்வியும் ஒரு குறிப்பிட்ட பயனுக்காக குறிப்பிட்ட தெய்வங்களுக்கு இன்ன இன்ன வேள்வித்தீயில் அளிப்பது என்று வரையறை செய்யப்பட்டது. பயன் கருதி செய்யப்படுவது வேள்வி.

ஆனால் விருந்தோம்பல் பலன் கருதாமல் செய்யப்படுவது. பசி என்னும் நெருப்பில் விருந்தினர் என்னும் தெய்வங்களுக்கு உணவு என்னும் ஆஹூதிகளை இடுவதால் இதுவும் வேள்வி போலத் தோன்றலாம்.

ஆனால் இந்த விருந்தோம்பலின் பலன் என்னவென்று கேட்டால், வேள்விப்பயனைப் போல அது இவ்வளவு பலன் என்று அறுதியிட்டு முடிவாகச் சொல்ல இயலாது.