நாளொரு குறள் – 31

429

நாள் : 31
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :1

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று தமிழில் சொன்னாலும், தர்ம, அர்த்த, காம, மோட்சம் என வடமொழியில் சொன்னாலும் தர்மமே முதன்மை இடம் பெறுகிறது.

அறம் கற்றலே வாழ்வின் ஆரம்பமாக இருக்க வேண்டும் என்பதாலேயே அறன் வலியுறுத்தல் முதன்மையாக வந்தது.

செல்வம் ஈட்டும் வழிகள் எத்தனையோ உண்டு. புகழீட்டும் வழிகள் எத்தனையோ உண்டு.

அறம் புகழைத் தரும். அறம் செல்வமும் தரும். இவை இரண்டும் வாழ்விற்கு போதுமென்றாலும் அறம் அதற்கு மேலும் சென்று பல ஆக்கங்களை, நன்மைகளை ஆன்மாவிற்கும் தரும்.

அறம்பிறழ்ந்த காரியங்கள் புகழையும் செல்வத்தையும் தரலாம். ஆனால் ஆன்மாவிற்கு தேவையான நன்மைகளை அறச்செயல்கள் மட்டுமே தரவல்லவை. மனிதன் உடலாலும் ஆன்மாவினாலும் வாழ்பவன். மற்ற காரியங்கள் உடலுக்கு நன்மை தரும். அறக்காரியங்களோ உடலுக்கும் நன்மை தரும், ஆன்மாவிற்கும் நன்மை தரும்.