வயவையின் தேவை ஒருங்கிணைந்த சேவை – உணர்வின் உரையாடல் – 3

778

வயவையின் வளர்ச்சிக்கென உருவாக்கம் பெற்ற அமைப்புகளின் ஒருங்கிணைந்த சேவை வயவைக்கு கிடைக்கிறதா? என்பது எமக்கு முன்னால் உள்ள பெரியதொரு கேள்வி. அதற்கான விடையையும், தீர்வையும் எனக்குள் தேடிய போது எழுந்ததே இந்த உரையாடல் அத்தியாயம்.

அதற்கு முன்,

சென்ற அத்தியாயத்தை வாசித்த நண்பர் ஒருவர், வயவன் வயவை என்ற முகநூல் முகத்தை தனிமடலில் அனுப்பி இருந்தார், சிறு புன்னகையுடன். வயவன் எனும் பெயரில் எழுதும் நான் யாரென்பதை கடந்த அத்தியாயத்தின் முடிவில் பதிவு செய்திருந்தேன் என்பதை அந்நண்பருக்கு இத்தால் அறியத் தருகிறேன். இனி உரையாடல்..,

வயாவிளான் இன்னும் விடுபடவில்லை. அதற்குள் எத்தனை அமைப்பு தேவையா என கடந்த காலங்களில் முகநூலில் அடிக்கடி கேட்கப்பட்ட ஒன்று. இந்த நினைப்பு யூதர்களுக்கு இருந்திருந்து, வெவ்வேறு நாடுகளில் இருந்த அவர்கள் ஒருங்கிணையாமல் போயிருந்தால், இன்று அந்த இனம் உலகில் இருந்திருக்காது. இஸ்ரேல் என்ற நாடும் இருந்திருக்காது. தவிர ஊர்தான் இன்னும் முழுமையாக விடுபடவில்லையே தவிர, வயவை மக்கள் தாயகம் எங்கும் வசிக்கிறார்கள் என்பதையும் அவர்களில் பலர் வாழ்வாதாரம் அற்ற நிலையில் உள்ளார்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. ஒரு வேளை வயாவிளானில் இன்னும் மீள் குடியேறாமால், வேறு ஊர்களில் வாழும் வயாவிளான் மக்களுக்கு எங்கள் அமைப்புகள் உதவி செய்ததாக செய்தி வெளிவந்தால் “ விடுபடாத ஊருக்கு இப்ப எதுக்கு அமைப்பு” என்ற கேள்வி வலுவிழந்து போகக் கூடும்.

“உதவுவது எனில் நேரடியாக உதவுவோம். அமைப்புகளில் இணைந்து உதவ தேவை இல்லை” என்ற கருத்தோட்டமும் காணமுடிகிறது. இது ஒரு தவறான கருத்தாகும். கஸ்டத்தில் இருக்கும் எனக்கு பிரான்சில் உள்ள ஒருவர் உதவுகிறார். அதே நேரம் இலண்டனில் உள்ள ஒருவரும் உதவுகிறார். அவுஸ்ரேலியாவில் உள்ள ஒருவரும் உதவுகிறார். ஆக மொத்தத்தில் மூவர் எனக்கு உதவ, நான் கொஞ்சம் வசதியாகிறேன். ஆனால், இன்னொருவருக்கு எவருடைய உதவியும் கிடைக்கவில்லை. அவர் சாப்பாட்டுக்கே கஸ்டப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது சரியா? ஒருவருக்குப் பலரின் உதவிகள் கிடைக்க இன்னொருவர் உதவி ஏதும் கிடைக்காமல் இருப்பது பிழையானது. இந்த இடத்தில்தான் அமைப்பு தேவைப்படுகிறது. உதவிகள் தேவைப்படுவோர் விபரத்தை சேகரித்து எல்லாருக்கும் உதவி கிடைக்க அமைப்புகள் கட்டாயத் தேவை.

அமைப்பில் அங்கத்தவராக விரும்பாமல், ஊர் மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோருக்கு, உதவி தேவைப்படுவோர் விபரத்தைக் கொடுத்து, மனித நேயச் செயற்பாட்டை “ஒருங்கிணைக்கும்” பணியை, எங்கள் அமைப்புகள் தங்கள் பணிகளில் ஒன்றாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் பரிந்துரை.

எடுத்துக்காட்டாக, வயாவிளான் நலன் புரிச் சங்கம் பிரித்தானியாவில் அங்கத்தவராக இல்லாத ஒருவர், ஊரில் உள்ள ஒருவருக்கு உதவி செய்ய விரும்புகிறார் எனில், “ஓம்.. நல்ல விசியம். இத்தனை பேருக்கு உதவி தேவைப்படுகிறது. இன்னாருக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது. உதவுங்கோ” என்று ஊக்கம் அளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் பிரித்தானியாவில் வசிக்கும் வயாவிளானார் ஒருங்கிணைக்கப்படுவார்கள். இதே போல் மற்ற நாடுகளில் உள்ள அமைப்புகளும் செய்தால் அந்தந்த நாடுகளில் இருக்கும் வயாவிளானார் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

இவ்வாறு நாடுகள் தழுவி ஒருங்கிணைக்கப்பட்ட வயாவிளானார் உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனில் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். எம் உடலியக்கத்தை எவ்வாறு மூளை ஒருங்கிணைக்கிறதோ, அதே போல எங்கள் அமைப்புகளை ஒருங்கிணைக்க ஒரு மூளை தேவை. மூளை தலையில் இருக்கும்; எமது தலை எங்கள் ஊர். எனவே அமைப்புகளை ஒருங்கிணைக்கும் மூளை, தலையாகிய வயாவிளானில் இருக்க வேண்டும். அப்படி ஒரு அமைப்பை எங்கள் ஊரின் நன்மை கருதி, முரண்பாடுகளை மறந்து ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். அந்த அமைப்பும் ஒன்றிணைந்து வாருங்கள் எனக் கோராமல் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் வாருங்கள் என்று மூளையாகச் செயலாற்ற வேண்டும்.

இது பற்றித் தனியாக உரையாட வேண்டியது அவசியம். எனவே அடுத்த உரையாடலில் விபரமாக உரையாடுவோம்.

குறிப்பு:
என்னைப் பொறுத்தவரை, அறத்தின் பக்கம் சார்ந்திருப்பதையே நாம் நடுநிலமை என்கின்றோம். இந்த உரையாடலும் அறத்தின் பக்கம் நிற்கிறதே அன்றி எந்த அமைப்பின் பக்கமும் அல்ல…

தொடர்ந்து உரையாடுவோம்..