கண்ணன் செயல்கள் சூழ்ச்சியா ?தருமமா? துரியோதனன் வதம்

பூரிசிரவசு
——————

தன் உதவிக்கு வருபவர்களைக் காப்பது ஒரு போர்வீரனின் கடமை. சாத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்தவன். பூரிசிரவசு மயங்கிக் கிடக்கும் சாத்யகியை கொல்லப் போகிறான். அவனைக் காப்பது அர்ச்சுனனின் கடமை ஆகிறது. அதனால் அம்பை விடுகிறான் அர்ச்சுனன். இது நேரடியாகவே தர்மம்தான். எத்தனையோ முறை துரியோதனன், கர்ணன், துரோணர் போன்றோரே மற்றவர்களினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

பகதத்தன் சிகையை அவிழ்த்தது
——————————————————-

இதுவும் நேரடி யுத்த தர்மமே.. இது தர்மமில்லையெனில் ஒருவனின் ஆயுதத்தை அழித்தவுடன் அவனைக் கொல்லவே இயலாது. அப்புறம் எல்லோரையும் மல்யுத்தம் புரிந்துக் கழுத்தை நெறித்துதான் கொல்ல வேண்டும். அர்ச்சுனனின் நாணைக் கர்ணன் எத்தனையோ முறை அறுத்தாலும் அடுத்த அம்பு தொடுப்பதற்குள் நாணேற்றி அம்பு விடுவான் அர்ச்சுனன். சாரதி, கொடி, இரதம், குதிரை, யானை இப்படி அனைத்தும் போரில் நொறுக்கப்படும். பகதத்தன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட போது அவன் முடி அவன் கண்ணை ஒரு வினாடி மூடுவது யுத்த நியதியின் பாற்பட்டதே ஆகும்.

பீமன் துரியோதனின் தொடையுடைத்தது
——————————————————————–

இதை கண்ணன் வாயிலாக வியாசரே விளக்கி இருக்கிறார். எப்பொழுது துரியோதனன் போர்களத்தை விட்டு அகன்றானோ அப்போதே அவன் தோற்றுவிட்டான். அதற்கு மேல் நடந்தது அறத்தின் வேலை மட்டுமே. ஒரு பெண்ணை இராஜசபையில் துகிலுரித்து தன் மடியில் அமரச் சொன்னதிற்கு தண்டனை.

தன்னுடைய அனைத்து உறுப்புகளையும் வைரம்பாய்ச்சி இரும்பாக்கிக் கொள்ள முடிந்த துரியனால் தன் தொடையை வைரம் பாய்ச்சிக் கொள்ள இயலாததான் காரணம் அதுதான்.

இதற்கு முன்னரான நிகழ்வைக் கூர்ந்து கவனியுங்கள்.

துரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் ‘நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு’ என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.

அவன் இருக்குமிடம் வந்த தருமர் ‘துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்’ என்றார்.அதற்கு துரியோதனன்..’தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்’ என்றான்.

நடுவே புகுந்த பீமன்..’வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா’ என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.

பீமன் – துரியோதனனுடன் மல்யுத்தம் செய்திருக்கலாம். அதில் தொடையை முறித்திருக்கலாம். அது பீமனின் வெற்றியாக இருந்திருக்கும். ஆனால் அது தர்மத்தின் வெற்றியாக இருந்திருக்குமா?

கண்ணன் பீமனைப் பார்த்து துரியோதனனைப் பார்த்து மல்யுத்ததிற்கு அழை எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. துரியோதனின் பலமான கதையுத்ததிற்கு பீமன் அழைக்கிறான்.

துரியோதனின் பலம் கதையுத்தம். அதிலும் அவனின் பலவீனமானத் தொடைகள் வெளிப்படாதது அதில்தான். அதனால்தான் அவன் அந்த யுத்தத்திற்கு உடன்படுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தர்மத்தின் மீதான கடமை மற்றும் உரிமை உண்டு.

ஒவ்வொரு முறை தர்மத்தின் மீதான கடமையை மீறும்பொழுதும் தர்மத்தின் மீதான உரிமையை இழக்கிறான்.

துரியோதனன் தர்மத்தின் மீது தன் உரிமையை இழந்துவிடுகிறான்.

பீமனைத் தட்டிக் கேட்கும் உரிமையை அனைவருமே இழந்து நிற்கிறார்கள். பலராமன், கிருபர், த்ருதராஷ்டிரன், காந்தாரி, வியாசர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் உட்பட யாருக்குமே உரிமையில்லை.

பீமனா — அர்ச்சுனனா — தர்மமா?

தர்மம்தான் மகாபாரத யுத்தத்தின் போக்கையும், அதன் ஒவ்வொரு விளைவுக்கும் காரணமாக அமைகிறது.

தர்மத்தின் இந்த ஆளுமையை ஏற்றுக் கொண்டதால் பாண்டவர்கள் உயர்கிறார்கள்.

கண்ணன் மட்டுமே இந்த தர்ம சூட்சமத்தை அறிந்தவர்.

மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றது பாண்டவர்களோ அல்லது வேறு யாருமோ அல்ல.

தர்மம் வென்றது. தர்மம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

பாண்டவர்கள் எல்லாவற்றையும் அவர்களின் சுயதர்மப்படி செய்து வென்றிருந்தால் தர்மத்தைப் பற்றி யோசிக்காமல் அவர்களின் புகழை மட்டுமே பாடிக் கொண்டிருப்போம்.

எது தர்மம் என்ற கேள்வியே பிறந்திருக்காது. தர்மத்தின் சூட்சுமம் புரிந்திருக்காது. தெளிவுகள் கிடைக்காது.

அதனால்…

அனைத்து வீரம் பலம் சாகசம் இவை எல்லாவற்றையும் விட

தர்மமே உயர்ந்தது என அறிவோமாக. என்னுடைய தர்மம் எனப் பார்க்காமல் பொதுதர்மத்தை அறிந்து செய்வோமாக. அதர்மங்கள் தங்கள் வலையில் நம்மை வீழ்த்தாமல் பார்த்துக் கொள்வோமாக.

அப்புறம்.. அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் என்ற நாயகன் பட வசனத்தை விட்டுவிட்டு அதர்மம் செய்யக் கூசுவோமாக.