துஷ்டரைக் கண்டால்..

தரும புத்தியும் துஷ்ட புத்தியும் பொருளீட்டப் போனார்கள். போகும் வழியில் தருமபுத்தி புதையல் ஒன்றைக் கண்டான். அவன் துஷ்ட புத்தியை நோக்கி “நண்பா! நாம் தேடி வந்த பொருள் கிடைத்து விட்டது. என் கண்ணில் பட்டாலும் கூட நீ வந்ததால் உனக்கும் பாதிப்பங்குண்டு” என்றான்.

இருவரும் புதையலைத் திறந்து பார்த்தனர். பொற்காசுகள் கிடந்தன. துஷ்டபுத்தி “நண்பா! இப்போது ஆளுக்கு நூறு காசுகள் எடுப்போம். மீதியை புதைத்து வைப்போம். தேவைப்படும் போது இருவரும் வந்து எடுப்போம்” என்றான். 

ஆளுக்கு நூறு காசுகள் எடுத்து விட்டு, புதையலை ஓரிடத்தில் புதைத்து விட்டு இருவரும் ஊருக்குத் திரும்பினர். துஷ்ட புத்தி நூறு காசையும் விரைவில் செலவழித்தான். தரும புத்தியிடம் சென்றான்.

“நண்பா! இருவரும் ஆளுக்குப் பாதியாகப் புதையலைப் பிரித்தெடுப்போம் வா” என்றான். இருவரும் சென்று புதையலை பார்த்தால் வெறும்பானை மட்டுமே இருந்தது. துஷ்டபுத்தி கோபம் கொண்டான்.

“டேய்.. எல்லாக் காசையும் நீயே எடுத்து விட்டு என்னை ஏமாற்றி விட்டாய்” என்று கத்திக் கொண்டு பானையை உடைத்தான். தருமபுத்தியோ திகைப்பில் இருந்தான். “நண்பா! நான் அப்படிச் செய்யவில்லை.. வா.. நீதிமன்றம் சென்று முறையிடுவோம” என்றான். இருவரும் நீதிமன்றம் சென்று முறையிட்டனர்.

நீதிபதிக்கு குழப்பமாக இருந்தது. சாட்சியங்களே இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். உடனே துஷ்டபுத்தி “புதையலை வனத்தில் புதைத்து வைத்தோம். எடுத்தவரை வன தேவதைக்குத் தெரிந்திருக்கும். வனதேவதைக் கேட்போம்” என்றான். 

மறுநாள் காலை நீதிபதி உட்பட அனைவரும் வனத்தில் கூடினார்கள். நீதிபதி “வனதேவதையே! புதையலைத் திருடியவர் யார்?” என்று கேட்டார். அதற்கு வன தேவதை “உனக்கு அருகில் நிற்கும் தருமபுத்திதான் திருடினான” என்றது.

நீதிபதி நம்பமுடியாமல் அதிர்ந்தார். தருமபுத்தியோ கடுங்கோபம் கொண்டான். செய்யாத திருட்டை செய்த்ததாகச் சொல்லும் வனதேவதை மேல் கோபம் கொண்டான். மரத்துக்கு தீ மூட்டினான்.

மரம் பற்றி எரிந்ததும் மரப்பொந்திலிருந்து துஷ்டபுத்தியின் அப்பா கத்தியபடி குதித்தார். எல்லாம் துஷ்டபுத்தியின் நாடகம் என்ற உண்மையை உரைத்தார். நீதிபதி துஷ்டபுத்திக்குக் கடுந்தண்டனை விதித்தார். பொற்காசை எல்லாம் தருமபுத்திக்குக் கொடுத்தார். துஷ்டபுத்தியின் அப்பா தீயில் கருகு மாண்டார்.

ஆம்… தீய வழியில் செல்வோரை தடுத்து நிறுத்தாமை தவறாகும். தீய வழியில் செல்லுமாறு மற்றவரைத் தூண்டுவதும் அதர்மமாகும். நம்பிக்கைத் துரோகமிழைப்பது பாவமாகும். இவை எல்லாமே துர்பலனை எமக்குத் தரும். நன்மை பயக்கா..