தமிழகத்தின் தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நரபலிக் கோரத்தாண்டவத்தில் வந்து நிற்கிறது. டம்மி ரவை கொண்டு தாக்க வேண்டிய காவல், SLR கொண்டு குறிபார்த்துச் சுட்டு நரவேட்டை ஆடி உள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு, வழக்கு எனப் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அண்மையில் மாபெரும் மக்கள் போராட்டமாக வீச்சம் கொண்ட போராட்டம் வெறித்தனமாக நசுக்கப்படுகிறது.
இணையவசதிகள் முடக்கம்; நேரலைத் தடை என திட்டமிட்டு போராட்டம் மழுங்கடிக்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் எதுவுமே இல்லை என்ற முடிவை நோக்கிக் காட்சிகள் ஓடுகின்றன.
அவங்க வேலையை நாங்கள் எளிதாக்கி விடுவோம் போல.. சம்பவம் கேள்விப்பட்டதும் இலண்டனில் இருப்பவர் கூட கொதித்துப் போனார்கள். “மோடியின் அடிமை எடப்பாடி.. இந்துத்துவா தீவிரவாதம்” என கோஷங்களும் பேட்டிகளிம் சமூகவலைத்தளங்களில் வரிசை கட்டுகிறது.
மீம்ஸ் கிரியேட்டர் விரலில் நீர் வடிய இரை கிடைத்த புழுகத்தில் மீம்ஸ் போட்டுத் தள்ளி விட்டார்கள்.
குழுமங்களில், கூட்டங்களில் மோடியையும் எடப்பாடியையும் கும்மி அடிச்சாச்சு…
இந்த உன்னதமான போராட்டம் இதுக்காகத்தானா நடந்தது? எதுக்காக நடந்ததோ அது மறைக்கப்பட்டு மோடி எதிர்ப்பு முன்னுக்கு வந்து நிற்கிறது.
இதுக்குத்தானா அத்தனை பேர் உயிர் ஈந்தார்கள். 23 ஆண்டுகள் போராடினார்கள்…
எந்த நோக்கத்துக்காக போராடினார்களோ, எதுக்காக உயிர் ஈந்தார்களோ அதை முன்னிலைப்படுத்துங்கள். அதை வெளியே கொண்டு வாருங்கள். போராட்டத்தை அணைந்து விடாமல் பாதுகாருங்கள்.
தார்மியம் (செப்பு) தயாரிப்பு ஆலையால் வெளியிடப்படும் நச்சுகளால் வளமற்ற பிள்ளைகள் பிறக்கிறார்கள். வளமோடு இருப்பவர்களோ பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இறப்புகளும் நிகழ்ந்திருக்கு.
இதை எல்லாம் வெளிக்கொண்டு வாருங்கள்.. அதுக்காகத்தான் மக்கள் போராடினார்கள் எனச் சொல்லுங்கள். நல்லதொரு தீர்வை நோக்கி நகருங்கள்.. தீர்வு கிடைக்குதோ இல்லையோ இன்ன காரணத்துக்காகத்தான் போராடினார்கள் என்ற வரலாற்றுப் பதிவாவது அழியாமல் கிடக்கும்.