நெஞ்சிருக்கும் வரை உன்றன் நினைவிருக்கும் தங்காய்! 🥰🙏

“Charity begins at home.”

ஆங்கிலப் பழமொழியானது மேலே இயம்புவதைப் போல “தான தருமங்கள் வீட்டிருந்து ஆரம்பிக்கின்றன.”

எங்கள் போராளிகளிடன் எண்ணிலடங்காத் திறமைகளும் தயையும் தலைவரின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் அந்தப் போராளிகளின் வீட்டிலும் பாடசாலையிலும்
பெறப்பட்டவை ஆகும்.

இன்னொரு வகையில் சொன்னால் தமிழன் மரபணு(DNA) வழியே பத்திரமாக மெல்லப் பக்குவமாகக் கடத்தப்பட்டவை ஆகும்.

இன்று உலகத் தமிழினத்தால் வெகுவாக அறியப்பட்ட எங்கள் போராளித் தங்கை சோபாவின் வரலாறும் அதற்கு எந்த வகையிலும் விதிவிலக்கானது அல்ல!

ஆம், சோபா யாழ்/வேம்படியில் கல்வி கற்ற போதிலும் இடப்பெயர்வின் பின் வன்னி மண்ணில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

கைலைவன்னியனின் வேரோடிய அல்லது பண்டார வன்னியன் தேரோடிய அடங்காப்பற்று என வியந்துரைக்கப்படும் வன்னி மண்ணில் தங்கை சோபா கல்வி பயின்ற பாடசாலையின் பெயர் மு/மல்லாவி மத்திய கல்லூரி ஆகும்.

போர்க்காலத்தில் செங்களங்களில் எம் வீரர்களால் சிந்தப்படும் செங்குருதியை மீள்ளேற்றம் செய்து உயிர்காக்கும் பணிக்காக தூக்கம் கடிந்து ஓய்வொழிச்சல் இன்றித் திரிந்த நாங்கள் போராளித் தங்கை சோபாவின் கல்லூரியிலும் குருதி
சேகரித்திருக்கின்றோம்.

அந்தப் பாடசாலையின் ஆசிரியப் பெருந்தகைகளில் அநேகமானோர் முண்டியடித்து முன்வந்து குருதிதானம் செய்வார்கள்.

திலீபனினத்தைச் சேர்ந்த
ஆசிரியர்களின் குருதித் தானத்தைத் தொடர்ந்து அடுத்தாக உயர்தர மாணவர்கள் குருதிதானம் செய்ய வருவார்கள்.

குழுமி இருக்கும் பெருங்கூட்டத்தை எல்லாம் முந்திக் கொண்டு வந்து நிற்பாள் எங்கள் தங்கை சோபா!

குருதி தானம் செய்யத் தகுதியானவரா என நாங்கள் குருதி அமுக்கம்(Blood Pressure),நாடித் துடிப்பு வீதம்(Pulse rate), உடல் நிறை(Body weight) ஆகியவற்றைச் சோதித்துப் பார்தால் எப்போதுமே சோபாவின் உடல் நிறை குறைவாக இருப்பதுண்டு.

ஆதலால்,

நாங்கள் சோபாவிடம் “நீங்கள் குருதிதானம் செய்ய முடியாது” எனக் கூறுவோம்.

ஆனாலும் தங்கை சோபா தன்னிடம் குருதியை எடுங்கள் என அடம் பிடித்துக் கொண்டே இருப்பாள்.

“அடம்” பிடிக்கும் அந்த தங்கைதான் போராட்டத் தேரின் “வடம்” பிடிக்கப் பின்னாளில் திருவுளம் கொண்டாள்.

ஆம், விடுதலைப் புலிகள்
இயக்கத்தில் தனை இணத்துக் கொண்ட
சோபாதான் பின் வந்த நாட்களில் ‘இசைப்பிரியா’என்ற உன்னத போராளியாக
மென்மேலும் “புடம்” போடப்பட்டு தமிழர்தம் இதயங்களில் இன்று நீங்காத “இடம்” பிடித்திருக்கின்றாள்!

– வயவையூர் அறத்தலைவன் –