“பிரபா எனும் பிஞ்ஞகன்றனும்” மெய்ப்பொருள் நாயனாரும்!!

சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் மெய்பொருள் நாயனார்.

அந்த நாயானார் வீரத்தில் சிறந்தோங்கிய ஒரு குறுநில மன்னனும் ஆவார்.

அறநெறிதவறாது அரசு புரிந்துவந்த மெய்ப்பொருள் நாயனார் பகையரசர்களால் கேடுவிளையாதபடி தனது குடிகளைக் கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தார்.

சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட இவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

மன்னனாகிய இந்த மெய்ப் பொருள் நாயனாரை போரிலே வெல்ல முடியாத எதிரி ஒரு முறை இவரை வஞ்சகத்தால் கொல்ல முற்பட்டான்.

மெய்ப்பொருள் நாயனாரிடம் பல முறை போரிட்டுத் தோற்று அவமானப்பட்ட முத்தநாதன் எனும் எதிரியே சிவனடியார் வேடம் பூண்டு தந்திரமாக நாயனாரின் அரண்மனைக்கு உள்ளே புகுந்து கொண்டான்.

சிவனடியாராக உள்ளே நுழைந்த முத்தநாதன் நாயனாரின் வீரநெஞ்சின் மீது குறுவாளைப் பாய்ச்சினான்.

மன்னன் இரத்த வெள்ளத்தில் கிடந்த போது வஞ்சகன் முத்தநாதனைக் கொல்லவதற்காய் வாளை உருவிக் கொண்டு அரண்மனைக் காவலன் வீராவேசத்துடன் பாய்ந்தான்.

இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனார் அந்தக் இக்கட்டான வேதனை மிக்க நேரத்திலும் நிதானம் தவறாது சிந்தித்து திருவாய் மலர்ந்தார்.

“இச்சிவனடியாருக்கு எனது நாட்டுக் குடிமக்களால் எந்த ஒரு இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக எங்கள் நாட்டுக்கு வெளியே பத்திரமாக விட்டு விட்டுவா” என்று பணித்தார்.

ஆம்! இது சைவநெறி எமக்குச் சொன்ன காதை ஆகும்.

உண்மையில் நடைபெற்றதா ? இல்லையா ? எப்போது நடை பெற்றது?

எவ்வளவு தூரம் இதில் உண்மையுள்ளதென நீங்கள் கேட்பது புரிகின்றது. அதற்கு எந்தனிடம் சரியான ஆதாரத்துடன் கூடிய பதிலேதும் இல்லை.

ஆனால், பலமான ஆதாரத்துடன் கூடிய யான் கண்ட கதை ஒன்றினை இன்று கூறுகின்றேன் கேளுங்கள்.

பிரபா எனும் பிஞ்ஞகன்றன் தமிழரெமை முப்பது ஆண்டுகள் ஆண்டு வந்தான்.

அந்தப் பிஞ்ஞகன்றன் காலத்தில் பல எதிரிகள் எம் மண்ணுக்குள் புகுந்தனர்.

அந்த எதிரிகள் சிவனடியார் வேடமோ, வண பிதா வேடமோ, பாதிதிரியார் வேடமோ, பிக்கு வேடமோ பிக்குனி வேடமோ அல்லது எந்த ஒரு மதகுரு வேடமோ தரித்து வரவில்லை!

இராணுவச் சீருடையில் கையில் போர் ஆயுதம் தாங்கியே போர் வெறியுடன் வந்தனர்.

அப்படி வெறியோடு வந்து தனது தமிழ்ப்படைகளின் கரங்களில் அகப்பட்டுச் சிக்கிய எதிரிகளை மன்னித்து தமிழீழக் குடிமக்களும் வீரர்களும் தாக்காது பாதுகாத்து மனிதாபிமானத்துடன் எங்கள் தமிழீழ எல்லைகளுக்கு வெளியே பாதுகாப்பாய் பக்குவமாய் பிரபா எனும் பிஞ்ஞகன்றன் அனுப்பி வைத்த பல சம்பவங்கள் உண்டெனவே உண்டு.

அத்தகைய பல சம்பவங்களில் ஒன்றினையே ஒளிப்படத்துடன் இணைத்துள்ளேன் பாருங்கள்.

ஒளிப்படத்தில் செங்களத்திடை சிறைப்பிடிக்கப்பட்ட (Prisoner Of War – POW) ஶ்ரீலங்கா இராணுவச் சிப்பாயும் அவன் பெற்றோருமே உள்ளனர்!

தமிழர்தரப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை பெற்றோர் பார்வையிட முடியும் என்ற அறிவித்தல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஊடாக சிங்கள தேசத்திற்கு கிடைத்தவுடன் சிங்கள மொழிபேசும் இந்த அம்மாவும் அப்பாவும் தமிழர் தேசத்திற்கு ஓடோடி வந்தனர்!

தங்கள் பிள்ளையின் அருகே உருகி நின்ற இந்த அம்மாவையும் அப்பாவையும் பார்த்த பல தமிழ் வீரர்களின் வீரவிழிகளை கண்ணீர் திரையிட்டது!

தங்கள் கண்ணீரை யாரும் காணக் கூடாது என நினைத்தபடி விழிகளை மெல்ல துடைத்தபடி நின்ற தனது மகனைச் சிறைப்பிடித்த தமிழ்வீரர்களின் நெஞ்சகத்து ஈரம் கண்ட இந்த அம்மா “மகே புத்தா”என்றே எல்லாத் தமிழ்வீரர்களையும் விளிக்கத் தொடங்கினார்!

எம் செம்மண்ணில் நிகழ்ந்த நெஞ்சம் நெகிழ் சம்பவத்தின் பின்னர் இவர் பிரபா எனும் பிஞ்ஞகன்றனின் மேலான உத்தரவுக்கு அமைய பக்குவமாய் விடுதலை செய்யப்பட்டார்!

ஆம், அறத்தாலும் மறதாலும் திறத்தாலும் மெய்ப்பொருள் நாயனாரைத் தோற்கடித்த எம் தலைவரைப் போற்றுவோமே!

போற்றிப் பள்ளுப் பாடுவோமே!

– வயவையூர் அறத்தலைவன் –