வெற்றியை விடத் தோல்விக்கே மதிப்பு அதிகம்

533

என் வெற்றிகள் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே வீழ்ந்தேன், எத்தனை முறை எழுந்தேன்  என்பதைக் கொண்டு என்னை மதிப்பிடுங்கள் – சொன்னவர் நெல்சன் மண்டேலா..

கடினமான இலக்கை நோக்கி கடினமான பாதையில் பயணித்தவர். நெருஞ்சி முள் செருப்பணிந்து விடுதலை தேடி ஓடியவர். காலம் எத்தனை முறை, இவருடைய பாதையிலிருந்து இவரைத் தூக்கி அடித்தாலும் அடுத்த நிமிடமே எழுந்து வந்து பயணத்தைத் தொடர்ந்தவர்.

தான் போன பாதை எங்கும் விதைகளைத் தூவிச் சென்றவர் – தனக்கா அல்ல.. தன்னைத் தொடர்ந்து வருபவர்கள் இளைப்பாற. அவ்விதைகள் பல கதைகள் சொல்லும். அவற்றில் சாதனையோடு வேதனையும் அதில் கலந்திருக்கும். இளைப்பாறும் இன்னொரு போராளி திடமோடு களமாட அக்கதைகள் உதவும்.

அத்துணைச் சாதனையாளனை உலகே வியந்து நோக்கிய போது, நோபல் பரிசு கொடுத்து நோபல் பரிசைப் பெருமைப்படுத்திய போது, அப்போராளியின் மதிப்பை வெளிப்படுத்த வெற்றிகளைப் பட்டியலிட்ட போது,  அந்த உன்னத விடுதலை வீரன் சொரிந்த சொற்கள் வெற்றிகள் மூலம் அல்ல.. என் தோல்விகள் மூலமும் அவற்றிலிருந்து நான் மீண்டதன் மூலமும் என்னைக் கணியுங்கள்.

அத்தகு உன்னதன் கறுப்பின மக்களின் ஆதவன் உதித்த நாள் இன்று.  புரட்சி புதிய வடிவில் பூத்த நாள் என்றாலும் சொட்டும் மிகை இல்லை.