பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்கும்.

200

யாரம்மா நீ ?

ஏனம்மா இத்தனை கோபமாய் பார்க்கின்றாய்!

யாரம்மா நீ ?

முப்பெரும் தேவியருள் நீதான்
துர்க்கை அம்மனா!

யாரம்மா நீ ?

மானுட விடுதலை தேடிய
ஜேசுவை கருவில் சுமந்த மாதாவா!

யாரம்மா நீ ?

அன்னை பூபதியின் அவதாரமா!

யாரம்மா நீ ?

பிரிகேடியர் துர்க்காவின்
மறுபிறவியா!

இல்லை,

பிரிகேடியர் விதுசாவின்
மறுபிறவியா!

கொரோனா ஆபத்தினை தெரிந்தும்
கொப்பன் உனை தெருவீதிக்கு
கொண்டு வந்தான!

கோதாரி விழுவாரின் தொடரும்
கொடுங்கோன்மைதனை உலகிற்கு சொல்ல
கொம்மாவுக்கு தெரியாமலே கூட்டி வந்தானா!

கனல் கக்கும் நின் பார்வையால்
கண்ணிவெடி வயல்கள் நடுவே நடந்த என் கால்களும் நடுங்குகின்றதே!

ஆட்லெறி அடியிலும் ஆயிரம் கிலோ குண்டிலும்
அலுங்காமல் குலுங்காமல் பயணித்த நெஞ்சம் ஆட்டம் காண்கின்றதே!

எதிரி நின் கோபக்கனலை புரிந்து கொள்ளாமல் போகலாம்!

ஏகாதிபத்திய நாடுகள் இனியும் பராமுகமாய் இருந்துவிடலாம்!

ஆனால்

நாங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் அல்லவா!

உந்தன் கேள்விக்கு எந்தனால் தனியே பதிலுரைக்க முடியவில்லையே தாயே!

உந்தனுக்கு பதிலுரைப்பது
தரணி வாழ் ஒவ்வொரு தன்மானத்
தமிழனின் தார்மீக கடனல்லவா!

தரணிவாழ் தமிழருடன் தமிழகத்து தமிழரும்
தாயகத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றாகி உனக்கு பதில் தருவோம் தாயே! 🥁

– வயவையூர் அறத்தலைவன் –