ஆழ்துளை நிரம்பிய கண்ணீர்த்துளி

ஆழ்துளை நிரம்பிய கண்ணீர்த்துளி
*********************************
அங்கன் நீயுறும் இடுக்கண்
நினைந்தேன் உள்ளம்
பதறித் தவிக்குதடா
படரும் துயரருந்தி
பகலிரவு தொடருநிதம்
பார்வையில் விரியும் செய்திகள்
எல்லாமுன் வரவினைத் தேடுதடா

அங்கண் குழிக்குள்ளே
மண் இறுக்கும் நாழிகையில்
என்னவெல்லாம் நினைத்தாயோ
தூரல் மழைபட்டு தலையில்
மண்சொரியும் நேரத்திலே
அம்மா திட்டும் என்று
மீண்டு வரத் துடித்தாயோ

மாதவமே மரகதமே
மாறாத பொன் சிரிப்பே
ஏழை வீட்டு மூலிகையே
அன்னை மடியிருந்த
சூடு இன்னும் ஆறலடா
மண்ணில் நீ தவழ்ந்த
தடங்களும் மாறலடா

மூச்சடக்கி மண்ணுக்குள்ள
என்ன பாடுபட்டாயோ
பசியுற்றிருப்பாயே
பச்சையுடம்பெல்லாம்
பிணியுற்றிருப்பாயே
பயந்து அழுதழுது
தொண்டைக்குழி வற்றியிருப்பாயே

பெற்றவளை அழைத்தனையோ
பாலருந்தக் கேட்டனையோ
கையுயர்த்தி தோளேற
தந்தை முகம் தேடினையோ
அண்ணாவை அழைத்து
துள்ளி விளையாட
மண்ணிருந்து மீளாயோ என் மகவே!

மூடாத துழிக்குள்ளே
வாடாமல் தளிர் மீள
வேண்டாத கடவுளில்லை
கை கூப்பாமல் யாருமில்லை
கோயில் குடியிருக்கும்
சாமிகளும் செத்துப்போச்சு
வானில் குடியிருக்கும்
வார்த்தைகளும் பொய்த்துப்போச்சு

நிலம் வற்றிச் சனம் சாகும்
நிலை பற்றி
யாருக்கு என்ன கவலை
அவர்கள்
நிலாவுக்கும் போகட்டும்
நீர் இருக்கா தேடட்டும்
நாங்கள் என்ன செய்வோம்
தேடி நிதஞ் சோறு தின்னும்
ஏழையானோமே
தேர்தலுக்கு காசு வாங்கி
அவர்களை வாழவைப்போம் !

க.குவேந்திரன்
28/10/2019