நாள் : 36
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :6
அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.
ஒன்றே செய்.. ஒன்றும் நன்றே செய்.. நன்றும் இன்றே செய்…
எத்தனையோ மேடைகளில் ஒலித்த இந்த வார்த்தைகளின் மூலம் இதுதான்.
நல்லது செய்ய நேரம் காலம் பார்க்க வேண்டாம். நினைத்த உடன் செய்து விடு என்பது பல நேரங்களில் பலரால் சொல்லப்பட்டது.
இதை பல அற நூல்களில் நாம் படித்திருக்கிறோம். புரிந்து கொண்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உணர்ந்ததில்லை.
இந்தக் குறளும் பலராலும் முழுதாகப் பொருள் சொல்லப்படாததாகவே நான் கருதுகிறேன்.
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
இப்படித்தான் எல்லோரும் பொருள் சொல்கிறார்கள்.
அதாவது, அறம் ஒன்றே உன் வாழ்வின் புகழாக நீடித்து வாழும் என்பது மற்றவர் கருத்து…
ஆனால் எல்லோருமே மற்றது என்ற வார்த்தையை மற்றும் அது என்றே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
நாம் மட்டும் அழியப் போவதில்லை. எல்லாம் அழியப் போகின்றன என்பதை மனதில் கொண்டு வாருங்கள். இப்பொழுது குறளை மறுபடி பாருங்கள்.
இன்னோரு நாள் செய்யலாம் என்று எண்ணித் தள்ளிப் போடாமல் அறம் செய்யுங்கள். அது…..
மற்றது பொன்றுங்கால் – உலகின் உள்ள அழியும் திறத்தினவை அழியும் பொழுதும்
பொன்றாத் துணை அழியாத துணையாக இருக்கும்.
அறம் ஒன்றே உலகம் அழியும் நிலை வராமல் உலகை காக்கும் ஒன்றாக, அழியாத துணையாக இருக்கும் என்பது நான் கண்ட கருத்து.
அறம் என்பது என்ன என்பதை மீண்டும் நினைவுபடுத்துங்கள்.
உன் மனதில் வெறி, கர்வம், ஆணவம், பழி உணர்வு, போதை இப்படிப்பட்ட உணர்வுகளைத் தூண்டும் செயல்களைச் செய்யாமல்எது உன் மனதை சுத்தமாக்கி, இலேசாக்கி ஆனந்தத்தைத் தருகிறதோ அதுவே அறம்.
ஆரவாரமான பூஜை புனஸ்காரங்கள், தான தருமங்கள், ஆடம்பர விழாக்கள் இவையெல்லாம் அறம் அல்ல என்பதை இதற்கு முன் சொன்னார் வள்ளுவர். இப்பொழுது சொல்கிறார், சுயநலமற்ற அழியும் தன்மையுள்ள இந்த உலகினை உயிர்ப்புடன் வைப்பதே அறம் என்கிறார்.
இன்று மரம் வளர்ப்போம், நீரின் தூய்மையைக் காப்போம், இயற்கையைக் காப்போம், விலங்க்குகளைக் காப்போம், பறவைகளைக் காப்போம் என பலர் செய்யும் அறமே உலகம் உயிர்ப்போடு இருக்க துணையாக இருக்கும்.