வயாவிளானின் முகவரிகளில் ஒருவரான கல்லடி வேலுப்பிள்ளை பிற்ந்த நாள் இன்று.

642

இணையத்தில் படித்ததில் பிடித்ததை, கல்லடியான் பிறந்த நாளில் உங்களோடு பகிர்கின்றேன்.

யாழ்ப்பாணம் வசாவிளானைச் சேர்ந்த கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளுக்கு 07-03-1860 அன்று ஈழத்து தமிழ் புலவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் மகனாய் பிறந்தார். ஈழத்தில் தோன்றிய பெரும் புலவர்களில் இவரும் ஒருவராக இடம்பிடித்தமைக்கு மிக வலுவான பல காரணங்கள் உண்டு. குறிப்பாக ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாண வரலாற்றில் இடம்பெற்ற மாற்றங்களை மிகத் துல்லியமாக பதிவு செய்த பெருமை இவரையே சாரும். அதற்கும் மேலாக நீண்ட கால தேடுதல் ஆராய்வின் பின்னர் இவரால் எழுதப்பட்ட “யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்னும் நூல் யாழ்ப்பாண வரலாற்றையும் ஒவ்வொரு ஊரின் பெயர் மற்றும் ஊராரின் பெருமைகளை அறிந்துகொள்ள உதவும் ஒரு பொக்கிசமாக உள்ளது.

இளமைக்காலம் முதல் கவி மற்றும் உரைநடையில் சிறந்து விளங்கிய இவர் தனது நாற்பத்தி இரண்டாவது வயதில் “சுதேசநாட்டியம்” எனும் தனித்துவம் மிக்க பத்திரிகையை சொந்தமாக வெளியிட்டார். சுமார் 32 வருடங்கள் தொடர்ச்சியாக வெளியான இப் பத்திரிகை எப்பிரபுக்களாயினும் எவ்வதிகாரிகளாயினும் எவ்வுத்தியோகத்தராயினும் எக் குருவாயினும் எந் நண்பராயினும் எக்கலாஞானியாயினும் நீதியற்ற கிரியைகளைச் செய்கின்றவராய்க் காணப்படுவாராயின் அக்கிரியையினையும் அவர் கீழ் நடுநிலையையும் எடுத்து வெளிப்படுத்த எதற்காயேனுமஞ்சி எம்மனஞ் சிறிதாயினும் பின் நிற்கப்போகின்றதில்லை. இதுவே நடுவுநிலையும் பொதுநன்மையும் விருப்பும் பத்திரிகா லட்சணமுமாம் என்னும் அவரின் நேர்த்தியான கோட்பாட்டிற்கிணங்க அன்றைய கால கட்டத்தில் யாழில் நடைபெற்ற முறைகேட்டு சம்பவங்கள் அனைத்திற்கும் எவ்வித தயக்கமும் இன்றி கண்டனம் தெரிவித்து வந்த ஒரே பத்திரிகையாக திகழ்ந்தது.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி நூலைப் போன்று கதிர மலைப் பேரின்பக் காதல், உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை போன்ற பக்தி கவிகளும் “மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி” போன்ற நையாண்டி கும்மி பாடல்களும் மிகப் பிரபலமானவை. இவரின் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று இலங்கையில் நான்காம் தர பாடப்புத்தகத்தில் “கொண்டாடினான் ஒடியற் கூழ்” எனும் தலைப்பில் இடம்பெற்றிருந்தமை இப் புலவரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட மேலும் ஒரு சான்றாக உள்ளது.

இன்றைய இலத்திரனியல் உலகிலும் அவரின் வரலாற்றுக் குறிப்புகளை இணையத்தில் கண்டறிய முடிகின்றமை அவரின் நிலைப்பை சுட்டிக்காட்டுகிறது.இவ்வாறான பல சிறப்புகளைக் கொண்ட நமது ஈழத்துப் புலவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையை அவரது பிறந்த நாளில் நினைவு கூருவதில் நாம் அனைவரும் பெருமை கொள்கின்றோம்.

தகவல்: வசாவிளான் மக்கள்

1 COMMENT