செவ்வாயில் புயல்கள் உண்டு. ஆனால் இவை நம்ம பூமியின் புயல் மாதிரி நீராவி அடிப்படையில் இல்லாம மிகச் சன்னமான துகள்களால் ஆனது. செவ்வாயின் தெற்குப் பகுதியில் மிகப் பெரிய பள்ளம் இருக்கு. இந்தப் பகுதிகளில் தான் இந்தப் புயல் ஆரம்பிக்குது. சாதாரணமா செவ்வாயில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் காத்து இருக்கும். இந்த தூசிப் புயலின் போது இது 70 லிருந்து 80 கி.மீ வேகம் வரைக்கும் அதிகரிக்கும். சில சமயம் செவ்வாய் கிரகத்தையே மறக்கிற அளவிற்கு பெரிசா இருக்கும் இந்தப் புயல்கள். 1971 ல் மிகப் பெரிய புயல் உண்டாகி இருக்கு, 2007 லும் அடுத்த பெரிய புயல் உண்டாச்சி.
நம்ம ஊரு டொர்னடோ மாதிரியும் தூசிப்புயல் உண்டாவது உண்டு. செவ்வாய் அதிகச் சூடாகும் பொழுது இது உண்டாகுதாம். இதன் உயரம் 10 கி.மீ வரை கூட இருக்குமாம். இந்தப் புயல்களில் உண்டாகும் மின்சாரம் செவ்வாயின் ஹைடரஜன் பெராக்சைடை உடைத்து மீத்தேன் வாயுவை உண்டாக்குதாம். ஆனால் இந்த மீட்தேன் சூரியனோட புற ஊதாக்கதிர்களால் அழிக்கப் பட்டு விடுதாம்.
ஆதி காலத்தில செவ்வாய் பூமி மாதிரி இருந்ததா இல்லையா அப்படின்னு பல கருத்துகள் இருக்கு, ஆனால் ஒண்ணு மட்டும் சர்வ நிச்சயம். செவ்வாயின் வளிமண்டலம் மெலிதாகிக் கொண்டே வருது. அதுக்குக் காரணம் அதில பசுமைக் குடில் வாயுக்கள் குறைவா இருப்பதுதான் அப்படிங்கறாங்க..
இதுக்கு இரண்டு விதக் காரணங்கள் சொல்றாங்க.. ஒண்ணு செவ்வாயின் உட்கரு திட நிலைக்கு மாறியதால், காந்த மண்டலம் குறைஞ்சு போச்சி. இதனால் சூரியக் கதிரியக்கத்தால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டு விண்வெளியில் சிதறடிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவை எதாவது மோதலில் சிதறடிக்கப்பட்டு இருக்கலாம்.. அல்லது வாயுக்கள் திரவங்களுடன் கலந்து பாறைகளாக இறுகிப் போயிருக்கலாம்..
செவ்வாயில் தவிச்ச வாய்க்குத் தண்ணி கிடைக்காதுன்னு தெரியும். ஆனா முன்னால தண்ணி இருந்திச்சா? இருந்திருந்தா அது எங்கப் போச்சு அப்படின்னு விஞ்ஞானிகள் இன்னும் மண்டையப் பிச்சுகிட்டு இருக்காங்க.
இன்னொரு சுவாரஸ்யமான விசயம்.
பூமி சாதாரணமா 23.5 சாஞ்சி இருக்குன்னு நமக்குத் தெரியும். ஆனால் இலட்சக்கணக்கான ஆண்டுகளில் இது 22.1 டிகிரியில்ருந்து 24.6 டிகிரி வரைக்கும் வேறுபடலாம் அப்படின்னு கணிச்சு இருக்காங்க..
ஆனா இந்தச் செவ்வாய் இருக்கே அது…
0 டிகிரியிலிருந்து 60 டிகிரி வரை சாய்வு கோணங்களில் மாற்றம் காடக்கூடியது. காரணம் அந்தப் பக்கத்தில இருக்காரே குரு.. அவர்தான். இதனால் 0 டிகிரி கோணத்தில் இருக்கும் பொழுது பனிப்படலம் செவ்வாய் நடுக்கோடு வரைக்கும் கூட வரலாமாம். 60 டிகிரி இருக்கும் போது பனிப்படலம் ஆவியும் ஆகிவிடுமாம்.
செவ்வாய்க்கு இதுவரை 40 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டிருக்கு, ஆனால் அதில் பாதிக்கு பாதி அம்பேல்.. ஃபெயில்.
மரைனர் 3, 4, 6, 7,9 வைகிங் 1, 2, மார்ஸ் குளோபல் சர்வேயர், மார்ஸ் பாத் ஃபைண்டர், மார்ஸ் ஒடிசி அப்புறம் மார்ஸ் ரிகான்னைசன்ஸ் இதெல்லாம் வெற்றி.
மார்ஸ் அப்ஸர்வர்,மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர், மார்ஸ் போலார் லேண்டர் இதெல்லாம் சொதப்பிய முக்கிய செயற்கைக் கோள்கள்
மரைனர் 4 தான் செவ்வாயின் தென் ட்துருவப் பகுதியை படம் எடுத்தது. என்னடா இது இன்னொரு சந்திரனைப் போல குண்டும் குழியுமா இருக்குன்னு யோசிக்க வச்சது. மரைனர் 6, 7 கூட செவ்வாயின் ஈர்ப்பு சக்தி, வளி மண்டலம் பத்திச் ஒன்னதே தவிர தெளிவான தகவல்கள் இல்ல.
மரைனர் ஒன்பதுதான் செவ்வாயில் எரிமலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய் அமைப்புகள் இருக்குன்னு காட்டிச்சி. 1971, அப்பதான் அந்த மிகப் பெரியதூசிப்புயல் வந்து மரைனர் ஒன்பதுக்கு ஆட்டம் காட்டிச்சி… அந்தப் புயல் ஓய்ந்த பின்னால்தான் செவ்வாய் பூமி மாதிரி இருந்திருக்கலாம்னு பெரிய நம்பிக்கையே வந்திச்சி…
வைகிங் 1 ம் 2ம் செவ்வாயின் நிலப்பரப்பு, வளிமண்டலம், நில அமைப்பு எல்லாம் படம் புடிச்சி தெளிவாக்கிச்சு. வைக்கிங் செவ்வாயில் இறங்கி செவ்வாய் பூமியில் இருக்கும் பாலைவனம் போன்ற அமைப்பில் இருக்குன்னு படங்காட்டிச் சொன்னது…
மார்ஸ் குளோபல் சர்வேயர்தான் செவ்வாயில் மணற்பரப்பில் அரிப்புகளை துல்லியமா படம் போட்டு காமிச்சது. இதை வச்சிதான் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருந்திருக்கும் பாலாறும் தேனாறும் ஓடி இருக்கும் அப்படின்னு எல்லாம் கதை எழுதினாங்க.
மார்ஸ் பாத் ஃபைண்டர் கதை நமக்குத் தெரியும்.. ரொம்பச் சீப்பான ஒண்ணு. இதில 8085 மைக்ரோ பிராஸஸர், வி.எக்ஸ். ஒர்க்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தோட ஒரு சின்ன வண்டியை வச்சி அனுப்பினாங்க. சோஜர்னர்னு பேரு. இதைப் பற்றிய கதை இரண்டு ஞாபகம் இருக்கு,
முதல் கதை…
சோஜர்னர் மார்ஸ்ல இரங்கின கொஞ்ச நாள்ல ஹேங்க் ஆயிடுச்சாம். அதன் பின்னால் வாட்ச்டாக் டைம் அவுட் ஆகி (சிஸ்டம் வேலை செய்யாட்டி சிஸ்டத்தை மறுபடி ரீஸ்டார்ட் பண்ணற நன்றியுள்ள டைம்பாமை வாட்ச்டாக்குன்னு சொல்லுவாங்க) சிஸ்டம் மற்படி உயிர்த்தெழுந்தது.
மைக்ரோசாஃப் ஆபரேட்டிங் சிஸ்டம் போடாததற்கு பட்ஜெட் பற்றாக்குறைதான் காரணம்… (நல்ல வேளை)
கதை இரண்டு :
ஹைதராபாத்தில நான் எங்க கம்பெனிக்கு மக்களை இண்டர்வியூ செய்யப் போனபொழுது நாலு பேரு சத்தியமா இந்த சோஜர்னரை அவங்கதான் டிசைன் பண்ணினதா தலைமேல் அடிச்சு சத்தியம் பண்ணினாங்க… சரி சரி அது எந்த வருஷம்.. அப்படின்னு கேட்டப்பதான் அது டிசைன் பண்ணின காலத்தில அவங்க +2 படிச்சாங்க என்ற உண்மை அவங்களுக்கே தெரிஞ்சது..
அப்புறம் இரண்டு தோல்விகள்.. மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர் தொபுக்கடீர்னு விழுந்திருச்சி, அடுத்து போலார் லேண்டரும் தொபுக்கடீர்,,,
அட என்னடா இது இப்படி புட்டுக்குதே என்ன பிரச்சனைன்னு ஆராய்ச்சி பண்ணினப்ப தான் …
அழுத்தத்தை பவுண்ட்ஸ் / இன்ச் என்பதற்கு பதிலா கிலோகிராம் / செ.மீ ப்படின்னு தப்பா ப்ரோக்ராம் பண்ணிட்டோம்னு கண்டு பிடிச்சாங்க. அதைப் பார்த்ததும் உங்களை மாதிரித்தான் நானும் ஹைய்யோ ஹைய்யோன்னு தலையில அடிச்சுகிட்டேன்.
மார்ஸ் ஒடிஸி தான் தண்ணீர் செவ்வாயின் நிலப்பரப்புக்கு கீழே ஐஸ் இருக்கும்னு சொல்லிச்சி..
அப்பால ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி அப்படின்னு இரண்டு இயந்திர வண்டிகளை அனுப்பிச்சாங்க. இவையும் பல தகவல்களைக் கொடுத்தன, எவ்வள்வோ கஷ்டங்களுக்கிடையில் தண்ணீ கொஞம் கீழதான் இருக்கு அப்படின்னு சொல்லுது.. உப்புகளை அம்போன்னு விட்டுட்டு தண்ணி காணாமப் போயிருக்கு..
தண்ணீரால் உண்டாகும் சல்ஃபேட் உப்புகள் படிமங்கள், தண்ணீரால் உண்டாகும் வளைவான அரிப்புகள், கூழாங்கல் போன்ற நீலவண்ண கற்கள்.. இதையெல்லாம் காட்டி,.. செவ்வாயும் ஒரு காலத்தில் தண்ணியடிச்ச குடிமகந்தான் அப்படின்னு நிரூபிக்க முயற்சி செஞ்சது..
கடைசியா அனுப்பின ஃபீனிக்ஸ் மார்ஸ் லேண்டர் நகராட்டியும், இருந்த இடத்தில் இருந்தே நல்ல நல்ல காரியங்கள் செய்யுது..
அது துருவப் பகுதியில் இறங்கி அங்க பனி கலந்த மண்ணைத் தோண்டியெடுத்து ஆராய்ந்தது, அதில் உறைநிலை வெப்பத்திற்குக் கீழேயும் தண்ணீரை திரவமா வைக்கும் பெர்குளோரேட் என்கிற வேதிப் பொருள் இருப்பதைச் சொன்னது.. மேகங்களில் இருந்து பனி பொழிவதையும் அது நிலத்தைத் தொடும் முன்னாலேயே ஆவியாகி விடுவதையும் சொன்னது.. குளிர்ல 5 மாசத்தோட இது செத்துப் போனாலும் நல்ல தகவல்கள்தான்.