கள்ளடிச்சான் குஞ்சு கம்பனானான் அன்று

ஒரு காலத்தில் தோப்பில் இருந்தது என் தொல்லூர். ஆம், பனந்தோப்பில் இருந்தது
‘வயவை’ எனும் வயாவிளான்.

“இன்று ஒரு தோப்பும் இல்லை.”எனும் நிலையை சிங்கபாகுவின் குமாரர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.

சுருங்கச் சொன்னால், எங்கள் திருவூராகிய வயவையின் ஆன்மாவை வளமான அழகிய பனந்தோப்புக்களை அழித்ததன் மூலம் காயப்படுத்தி உள்ளனர்.

அந்த ஆறறிவு சீவன்கள் ஓரறிவு சீவன்கள் மீது கொண்ட கோபம்தான் என்னவோ?

வடமாநிலத்தின் சின்னமாக பனை இருந்ததுதான் அதற்கான காரணமோ!

பனந்தோப்பு ஏன் ஒரு தனிப்பனை மரம் காண்பதே இன்று கடினமாக இருக்கிறது.

தென்னம்’பிள்ளைகளை’ தாம் பெற்றெடுத்த பிள்ளைகளாகவே கண்டவர்கள் தமிழர்கள்.

ஆதலால்தான் தென்னை மரத்தை ‘பிள்ளை’ என விளித்தனர்.

அஃதே,நூறாண்டுப் பயிரான பனையையும் ஒரு வகையில் பிள்ளைகளாகவே கண்டவர்கள்.

பனம்பாலுண்டு மகிழ்ந்த சில பெருங்குடி மக்கள் கண்ணனின் கருநிறம் கொண்ட கன்னிப்பனைகளை கன்னிப்பெண்களாகக் கண்டார்கள். 😆

இது சற்றுச் சுவரசியாமான விடையம்.

ஆம், குட்டியாச்சி வீட்டில் “பனங்கள்” அருந்தி அடர்ந்த பனங்காட்டின் வழியே வெளியேறி வந்த காவியன் மாமா உள்ளம் பூரிக்க, மகிழ்ச்சி பொங்க ஒரு தடவை கைகளை அகலவிரித்து கன்னிப்பனை ஒன்றைக் கட்டிப்பிடித்து பின்வருமாறு பாடினார்.

“கன்னிப்பனைத் தோட்டம் காவியன் நடுவினிலே…”

சினிமாப் பாடல் ஒன்றினை நகலெடுத்து சிந்தித்துச் சிறிது மாற்றிப் பெருங்குரலெடுத்து கோவலன் மாமா பாடியது இன்றும் என் காதில் ரீங்காரம் செய்கிறதென என் அண்ணா சொல்வார்.

உலகின் முதற் பெண் பிரதமரான அமரர் திருமதி சிறிமாவோ பண்டரநாயக்க ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் பிறவூர்களைப் போலவே வயவையிலும் நிறைய கல்வீடுகள் கட்டப்பட்டது.

பெருநிலப்பரப்பின் அடர்ந்த அடவிகளிலிருந்து பாலை,முதிரை போன்ற மரங்களைக் கொண்டுவந்து அழகிய கதவுகள், வாசற்கால்கள்(கதவுநிலை) சாரளம் அமைப்பார்களாம்.

கூரை வேலை என வந்தவுடன் தயங்கி நிற்பார்களாம் வயவர்கள்.

காரணம், கூரை வேலைகள் பெரும்பாலும் எங்கள் ஊரில் ‘கன்வஷ்’ போன்ற மென்
மரங்களில் ஒருபோதும் செய்யபடுவதில்லை. மாறாக பலமான பனைமரங்களிலேயே செய்யப்படும்.

எனவே கற்பகதருக்களைத் தறிப்பதற்கு கலங்கி நிற்பார்களாம்.

சிறுபராயத்தில் பனந்தோப்பில் வாழ்ந்த அருமை தெரியவில்லை. கற்பக தருக்கள் நடுவே என் யான் வாழ்ந்த பெருமை பெரிதாகத் தெரியவில்லை.

ஊர் ஊராய் இடப்பெயர்ந்து அயலூர்களில் வாழ நேர்ந்த போதுதான் எங்கள் வயவையில் உள்ளது போல் அப்படியொரு நெருக்கம் நெருக்கமான பனந்தோப்புக்கள் வேறு எங்கும் இல்லையென விளங்கியது.

“சூரியக்கதிர்” என ஓர் இராணுவ நடவடிக்கைக்கு பெயர் சூடி மருமகள் சந்திரிக்காவும் மாமா இரத்வத்தையும் வதம் செய்து வந்தார்கள்.

அந்த நேரத்தில்(1996இல்) நாங்கள் கிளாலி கடலினைத் தாண்டி அடங்காப்பற்றில் வாழ்ந்தோம்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் உள்ள மாமாவின் வீடு, 05 ஏக்கர் காணியில் நடு நாயகமாய் எழுந்து நின்றது. அங்கே ஏகப்பட்ட பயன் தருமரங்கள் இருந்தன.

பனை மரம் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.

மாமாவின் வளவின் வேலியில்தான் பனை மரங்கள் இருந்தது. அது தொடர்பாக பேச்சுக் கொடுத்த போதுதான் தொழிலதிபர் மில்க் வைற் கனகராசா அவர்கள் பற்றி ஓர் புகழுரையே செய்தார்.

ஆம், 60 களில் தொழிலதிபர் அமரர் கனகராசா அவர்கள் யாழிலிருந்து பாரவூர்திகள் மூலம் பனம் விதைகளை கொண்டு வந்து தந்து தங்களை பனை நடுகைக்கு ஊக்குவித்த உத்தமரின் பெரும் காதையை சபா மாமாவும் மணியம் மாமாவும் சொன்னார்கள்.

நன்றி

தொடரும்…