அ, இ, உ சேர்க்கும் முறைமை:-
தமிழில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ஒரு சொல்லின் முதலெழுத்தாக வரலாம். ஆனால் உயிர்மெய் எழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங எனும் பத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரக் கூடியவை. இவற்றுள் “ங” மொழி முதலில் எப்படி வரும் என்று ஐயம் தோன்றலாம். அ,இ,உ, எ, யா என்பனவற்றோடு இணைந்து அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என வரும் என இலக்கணம் இயம்புகிறது.
“ஞ” எனும் எழுத்து ஞாயிறு, ஞாலம், ஞான்று, ஞிமிறு (வண்டு) ஞமலி (நாய்) எனப் பல சொற்களில் வருதல் காணலாம்.
இப்போது நாம் சிந்திக்க வேண்டியது, ராமன், லட்சுமணன், ரங்கநாயகி, லோகநாதன் போன்ற பெயர்களைப் பற்றித்தான். இவை போன்ற வடமொழிப் பெயர்களாயிரம் தமிழில் நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருபவை. “ல,ள, ர, ற” இப்படியான எழுத்துகள் மொழி முதலில் வாரா. பின் எப்படி இவற்றை எழுதுவது?
முன்னரே நாம் அறிந்து கடைப்பிடிக்கும் முறைதான். மீண்டும் நினைவூட்டுகிறேன். இத்தகைய பெயர்களின் முன்னெழுத்தாக அ, இ, உ ஆகியவற்றை இடமறிந்து, பொருத்தமறிந்து இணைத்து இச்சொற்களை எழுத வேண்டும்.
(எ-டு) இராமன் (இ), இலட்சுமணன் (இ), அரங்கநாயகி (அ), உலகநாதன்(உ). இப்படிப் பொருத்தமாகச் சேர்க்க வேண்டும்.
இலட்சுமணன் என்ற பெயரைத் தமிழ் ஒலிப்படுத்தி இலக்குவன் என்றே கம்பர் எழுதினார். லட்சுமணன் என்ற பெயரை அலட்சுமணன் ஆக்கிவிடக்கூடாது.
ரங்கசாமி என்ற பெயரை அரங்கசாமி என்றெழுதிட வேண்டும். இரங்கசாமி ஆக்கிவிடக்கூடாது.
ஸ்ரீ ரங்கம் – திருவரங்கம்.
உலகநாயகி என்ற பெயரை அலகநாயகி என்றோ, இலக நாயகி என்றோ ஆக்கிடல் ஆகாது. பெரும்பாலும் நம் மக்கள் பயன்பாட்டுத் தமிழில் சரியாகவே காண்கிறேன். சிலர் ஏனோ இரங்கசாமி என்று எழுதி வருகிறார்கள். இராமசாமியை யாரும் அராமசாமி என்று இதுவரை ஆக்கவில்லை.
இறும்பூதும், இறுமாப்பும்:-
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் உரைகளில் எழுத்துகளில் இவ்விரு சொற்களும் நிரம்ப இடம் பெற்றிருக்கும். இறும்பூது என்னும் சொல்லுக்கு வியப்பு, அற்புதம், பெருமை, வண்டு, மலை, தாமரைப்பூ எனப் பல பொருள் உண்டு. “உங்கள் வளர்ச்சி கண்டு நான் இறும்பூதடைகிறேன்” என்றால் பெருமையடைகிறேன் என நல்ல பொருளில் கொள்ள வேண்டும். நான் வியப்படைகிறேன் என்று பொருள் கொண்டால், பாராட்டு மாறிப் பழிப்பாகிவிடும்.
இறுமாப்பு என்பது, செருக்கு, அகந்தை, பெருமிதம், நிமிர்ச்சி, ஆணவம் என்று பலவாறு பொருள் சொல்லப்பட்டாலும், ஏறத்தாழ ஒரே பொருள் தருவன அச்சொற்கள்.
அரிய பல நல்லவற்றை, ஆற்றலை, வெற்றியைப் பாராட்டும்போதும், வியப்பான செய்திகளைக் கேட்டபோதும் இறும்பூது என்னும் சொல்லை ஆளுதல் நன்றாம்.
இறுமாப்பு – பெருமிதம் என்ற பொருளில் மனிதர்க்கு இருக்க வேண்டிய நற்பண்புகளுள் ஒன்றே. ஆனால் அது அகந்தையாய், ஆணவமாய் ஆகிவிடக்கூடாது. கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு மாந்தரிடையே இருப்பது இயற்கையே. இவ்விரு சொற்களும் தக்கவாறு இன்றும் பயன்படுத்தப்படுமானால் தமிழுக்கு ஆக்கமாம்.
கோவிலா? கோயிலா?
தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது.
நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் “ய், வ்” என்றிரண்டு.
கோ (க் + ஓ) இல் (இ) கோ என்பதில் “ஓ” எனும் உயிரும், இல்லில் “இ” எனும் உயிரும் இணையுமிடத்தில் “வ்” எனும் மெய்யெழுத்து தோன்றும்.
ஆதலின் கோ + வ் + இல் = கோவில் என்பதே சரியானது.
கோயில் என்னும்போது கோ + ய் + இல் = கோயில் என்று “ய்” உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், “இ, ஈ, ஐ” வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் “ஏ” முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்.”
கோவில் ஓகாரம் இருப்பதால் “வ்” உடன்படு மெய்தான் வர வேண்டும்.
ஆயினும், மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது.
இது ஏற்கத்தக்க பிழையே.
மணி + அடித்தான் = மணியடித்தான் (இகரத்தின் முன் “ய்” உடம்படு மெய் வந்துள்ளது.)
தே + ஆரம் = தேவாரம் (ஏகாரத்தின் முன் வ் உடம்படு மெய் வந்தது.)
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் “வ்” உடன்படு மெய் வந்தது)
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் “ய்” உடம்படுமெய் வந்தது. அவனேயழகன் என்றானது.
போதும் எனக் கருதுகிறோம். இலக்கணம், படிப்பவர்க்குச் சுமை ஆகிவிடாமல் சுவை பயத்தல் வேண்டும் எனும் நோக்கில்தான் எழுதிவருகிறோம்.
தமிழ் வளரும்…….