இறந்தழிந்துபோன காலங்களும், இறந்த காலங்களின்
இன்னமும் இறக்காது உயிர்ப்போடு இருக்கும் காயங்களும்,
அதன் ஏக்கங்களும்,
உடலையும் உள்ளத்தையும் தின்றும் தின்னாமலுமாக பாதியில் விட்டுவிட்டன.
தீர்க்க முடியாத நோய்களும்,
அவை தின்று தொலைத்த மருந்துகளின் பக்கவிளைவுகளும்
எஞ்சிய உடல்வலுவையும்
தின்று ஏப்பம் விட்டு விட்டன.
பலநூறு அடி தொலைவுக்கு
பூமியை ஆழத்துளையிட்டு
நீரை உறிஞ்சித்துப்பும்
நீர்ப்பம்பி போல
வெறும் சக்கையான உடலை
“உழைப்பு” இப்போ உறிஞ்சிக் குடிக்கிறது.
இதற்கிடையே,
கொல்லைப்புறம் வழியே
வீட்டின் எல்லைவரை
நுழைந்த சாவு,
இப்போ
படுக்கையறைக்குள் புகுந்து
பாய்விரித்து பல நாளாயிற்று.
“பாடை” ஏறிய உடல்
தலைவாசல் மிதித்து
தெருக்கோடி போகும்வரை
விடமாட்டேன் உனை – என
சாவு தலைமாட்டிலேயே
தவம் கிடக்க தொடங்கியாச்சு.
நீரில் உருவாகி
நீருக்குள் தனை வளர்த்து
நீர்க்குடத்தை உடைத்துக்கொண்டு
உயிராகி வெளிவந்த உடல்,
இனி
தீயினால் சாம்பலாகி- பின்
மீண்டும் நீரிலே கரைந்து சங்கமிக்கும் நேரம்
வந்தாச்சு.
ஆனாலும்,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.
மறைகின்ற சூரியன்
மறுநாளும் வந்துதிக்கும் – என்ற
நம்பிக்கையில்
மறுநாளை திட்டமிட்டுவைத்துவிட்டு
இன்று தூங்கச்செல்வதுபோல்,
நாளை விடியக்கூடுமென்ற நம்பிக்கையில்,
இருள்கவிழ்ந்த இன்றைய நாள் நகர்கிறது.
முடிவு,
விடிவாகக்கூடுமோ?
அன்றேல்
முடிந்த முடிவாகவே போகுமோ?
ம.பசீலன்