கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். அவனிடம் பணம் கோடி கோடியாகக் கொட்டிக் கிடந்தது. உலகெங்கும் பறக்கும் அவனிடம் இருந்த குணமொன்று என்னவெனில், தான் போகும் இடமெங்கும் தன் கையிருக்கும் காடும் வர வேண்டும் என்று விரும்பினான்.
போகும் நாட்டின் நாணயத்துக்கு ஏற்ப தன் காசை எல்லாம் மாற்றிக் கொண்டு போவான். திடீரென ஒரு நாள் தான் சாகும் போது தன் காசை என்ன செய்வது என்று யோசித்தான். பலவாறு யோசித்தும் எந்த வித யோசனையும் தோன்றவில்லை. யோசனை தேடி பல இடங்கள் அலைந்தான். இறுதியில் மகான் ஒருவரை அணுகிக் கேட்பதாக முடிவு செய்தான்.
அயலூரில் இருந்த மகானிடம் சென்றான். தான் சாகும் போதும் தன் பணம் தன்னோடு வர வேண்டும் என்ற ஆசையைச் சொன்னான். “வெளிநாடுகளுக்குப் போகும் போது என்ன செய்தாய்” என மகான் கேட்டார்.
அமெரிக்காவுக்குப் போகும் போது டொலராகவும் ஐரோப்பாவுக்குப் போகும் போது யூரோவாகவும், சீனாவுக்குப் போகும் போது ஜென்னாகவும் கொண்டு போனதாகச் சொன்னான். அதற்கு முனிவர் “சாகும் போது உன் பணத்தை உன்னோடு கொண்டு போக புண்ணியமாக மாற்று” என்றார்.
அவன் ஒன்றுமே புரியாமல் விழித்தான். புண்ணியமாக மாற்றுவது எப்படி என்று சிந்தித்தான். அவனுடைய சிந்தனையோட்டத்தைக் கணித்த மகான் புன்னகையுடன் “எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி உன் பணத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவு; புண்ணியம் உன் கணக்கில் சேரும்; சாகும் போது உன்னோடு கூட வரும்” என்றார்.
செல்வந்தன் சிந்தை தெளிந்தவனாக தன்னூர் திரும்பினான்.