வயவையின் யோசெப் யேசுதாஸ் – நெதர்லாந்து வாழ் கலைஞர்

249

இப்பதிவின் மூலம் நாடக ஆளுமை திரு.தயாநிதி தம்பையா அவர்களின் முகநூல் பதிவாகும்.

வயாவிளானைச் சேர்ந்த மதிப்பு மிகு யோசெப், நேசமணி தம்பதிகளின் மகனான திரு. யோசெப் யேசுதாஸ் அவர்கள், நெதர்லாந்தில் வசித்து வருகிறார். வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் தாயக விடியலை விரும்பியதாலும் இன விடுதலை உணர்வின் உந்துதலாலும் உரிய நேரத்தில் இந்தியா சென்று கற்றுக் கொள்ள வேண்டியவற்றை கற்றவராகத் தாயகம் திரும்பினார்.

காலச்சக்கரத்தில் சிக்குண்ட இவர், தாயக விடுதலைப் பயணத்தில் காலில் விழுப்புண் அடைந்தார். கொண்ட கொள்கையில் பின்வாங்காத இவர் 1990 இல் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டில் புகலிடம் பெற்றார். கிஞ்சித்தும் அஞ்சாது இன விடுதலைப் பயணத்தில் தன் பாதையை மாற்றிக் கொண்டார்.

சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் கைதேர்ந்தவர் ஆகையால், கலைப் பாதையில் விடுதலை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தார். இவரது தாயார் திருமதி நேசமணி யோசெப் அவர்கள் ஆன்மீகப் பணிகளில் மிகவும் பற்றுள்ளவர். கத்தோலிக்கப் பாடல்களை மிகவும் நேர்த்தியாகப் பாடிக் கொண்டிருந்தவர். அவர் வாயிலாக தன் பாடும் திறனையும் மேருகூட்டிக் கொண்டார்.

இயல்பாகவே கலைக்கடாட்சம் கொண்ட இவரின் கலைத்தாகமும் அன்னை கொடுத்த மேலதிகப் பயிற்சியும் கலைப்பாதை ஊடான இவருடைய விடுதலைப் பயணத்துக்கு பேருதவியாக இருந்தன. இருந்து கொண்டிருக்கின்றன. இவர் முதன் முதலாக 1993 இல் நெதர்லாந்தில் மாவீரர் நிகழ்வில் இசை நிகழ்வினை தொடங்கினார். ஒரு தபேலா; ஒரு சுரத்தட்டு; ஒரு பொங்கோஸ் போன்ற வாத்தியக் கருவிகளை மட்டுமே வைத்துக் கொண்டு எம்.எஸ்.ஈஸ்வரன், விஜயன் போன்றோருடன் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாடத் தொடங்கினார். பின்னர் நெதர்லாந்தின் பிரபல இசைக்குழுவான தமிழ் அமுதத்துடன் இணைந்து, அக்குழுவில் எட்டு ஆண்டுகளாகத் தபேலா வித்தகராகப் பணி புரிந்தார்.

கால ஓட்டம் மீண்டும் இவரை புரட்டிப் போட இன்று ஒரு கரோக்கி இசைக்குழுவில் அறிவிப்பாளராகவும் பாடகராகவும் திகழ்கின்றார். இவரிடம் எப்போதும் தாயகப் பற்று மேலோங்கி இருப்பதால் மண்ணிண் விடியலை எதிர்பார்த்து ஏக்கங்களைச் சுமந்த படி கலைப் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றார்.

இவர் நீண்ட ஆயுளும் குன்றாத ஆரோக்கியமும் பெற்று கலைப்பாதையில் தன் இலக்கு நிறைவேறும் வரை பயணிக்க வயவையின் அருள் என்றும் துணை இருக்கட்டும்.