தகப்பன் பறவைகள்!

736

பசியோடு குழந்தை படுத்திருந்தது. பசி எடுக்கத் தொடங்கும் போது சின்னச் சிணுங்கல்களில் வெளிப்படுத்திய குழந்தை, எதுவும் தரப்படாத காரணத்தால் பசி மேலிட்டு வீரிட்டு அழுது, அழுது அடங்கி, களைத்துறங்கியது. அதனருகில் அசைவற்று அமர்ந்திருந்தாள் அன்னை.

எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவிய காலமாதலால், பெரும்பாலும் பசித்த வயிற்றுடந்தான் அவள் இருப்பாள். உயிரைப் பிடித்து வைத்திருக்க மட்டும் உண்டாளே ஒழிய வேறெதற்கும் அவளால் உண்ண இயலா சூழ்நிலை. அதனால் குழந்தைக்குக் கொடுக்கக் கூட அவளில் பால் இரங்கவில்லை. ஆனாலும் குழந்தைக்குப் பசிக்கும் நேரம் அறிந்து புட்டிப்பால் தயாரித்துக் கொடுப்பாள்.

ஆனால் அப்போது பால்மா முடிந்து விட்டிருந்தது. பிள்ளைக்கு பசியெடுக்கும் நேரம் நெருங்குவதை அறிந்து நெஞ்சு பதைக்க நின்றிருந்தாள். பசிப்பதை குழந்தை அழுது சொன்ன போது துக்கம் நெஞ்சைப் பிசைய திக்கற்று இருந்தாள். பசி கூடக் கூட குழந்தையின் அழுகை அதிகமாகி, களைப்பாகி அழுவதை நிறுத்த, அவள் இடிந்து போய் அமர்ந்தாள்.

பெருந்துயர் அவனை தாக்கிய போதும், வெப்பியாரம் அவனைச் சுட்டெரித்த போதும் பால்மாவுக்கு என்ன செய்வது என யோசித்தபடி இருந்தான் தகப்பன். அழுதோய்ந்த பிள்ளையும் துவண்டு விழுந்த மனைவியும் அவன் முன்னால் இருக்க அவனுடைய அப்போதைய தேவை பால்மா பைக்கட்டாகவே இருந்தது. ஆனால் பால்மா பைக்கட்டை அடைவது அவ்வளவு எளிதான காரியமில்லை..

தமிழனை அழித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு, யுத்த அறங்களை அலட்சியம் செய்து, ஆரம்பிக்கப்பட்ட போர் உச்சம் தொட்டிருந்த அந்நேரத்தில் பால்மாவுக்கு பயங்கரமான தட்டுப்பாடு நிலவியது.

நான்கு இலட்சம் மக்களுக்கு வெறும் நாலாயிரம் பால்மா பைகளே அனுப்பப்பட்டிருந்தன. அதனை எப்படிப் பங்கிடுவது எனத் திண்டாடிய அரசாங்க அதிபர், மருத்துவமனைக்கு பால்மா பைக்கட்டுக்களை கையளித்தார்.

கிளிநொச்சி மருத்துவமனையும், புதுக்குடியிருப்பு மருத்துவ மனையும் இல்லாத நிலையில், அத்தனை இலட்ச மக்களுக்கும் இயங்கிய ஒரே ஒரு மருத்துவமனையாக மாத்தளன் மருத்துவமனை விளங்கியது. நாள்தோறும் அங்கே சிகிச்சை பெறுவோர் தொகையோ பன்மடங்கதிகம். அதனால் பால்மா பைக்கட்டுகளை எவ்வாறு வழங்குவது என்பதில் அவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் குருதிக்கொடை வழங்குவோருக்கு பால்மா பைக்கட்டு வழங்குவதாக மருத்துவமனை தீர்மானித்தது.

கண்மூடித்தனமான குண்டு தாக்குதலால் படுகாயமடைந்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் பெருமளவில் குருதி தேவைப்பட்டது. திருகோணமலை மருத்துவ அதிகாரியால் சேகரிக்கப்பட்ட குருதி கூட கப்பலில் ஏற்றப்பட்ட பின் சிங்கள இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மாத்தளனிலிருந்து திருகோணமலைக்கு நோயாளிகளை அனுப்ப போதியளவு போக்குவரத்துகள் இன்மையால் காயக்காரர்களால் மாத்தளன் மருத்துவமனை நிரம்பி வழிந்தது.   இதனால் மாத்தளன் மருத்துவமனையில் குருதிக்கு பெருந்தட்டுப்பாடு நிலவியது. ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருப்போரிடமிருந்து குருதிக்கொடை பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு குருதியைக் கொடுக்கும் கொடையாளர்களுக்கு ஏற்படும் பலவீனத்தை போக்க பால்மா பைக்கட் வழங்க முடிவானது. அதே வேளை பச்சிளம் பாலகர்க்கும் உயிரைப் பிடித்து வைத்திருக்கவேனும் பால்மா பைக்கட்டு வழங்கப்பட்டது. இருப்பும் பெரியளவில் இல்லை.

இந்நிலையில் பால்மா பைக்கட்டு தேவையான நிலையில் அந்தத் தகப்பன் சிக்குண்டிருந்தான்.

பால்மாவைப் பெற அவனுக்கு சில வழிகள் இருந்தன. நிர்வாகத்துறையிடம் எனக்கொரு பால்மா பைக்கட்டு தாருங்கள் எனக் கேட்கலாம். ஆனால் அவனொரு மருத்துவப் போராளி என்பதாலும், பால்மாப்பைக்கட்டுக்கு நிலவும் தட்டுப்பாட்டினை நன்கறிந்தவன் என்பதாலும் சும்மா போய்க் கேட்க அவன் மனம் ஒப்பவில்லை.

குருதிக் கொடையளித்து பால்மா பைக்கட்டை பெறுவது அவனுக்கிருந்த இரண்டாவது வழி. ஏற்கனவே அவன் மூன்று முறை குருதிக்கொடை வழங்கி இருந்தான். ஒவ்வொரு குருதிக்கொடைக்கும் இடையில் மூன்றுமாதகால இடைவெளி இருத்தல் வேண்டும் என்பது மருத்துவ நெறி. ஆனால் அவன் மக்கள் மீதான அன்பால் மருத்துவ நெறி பிறழ்திருந்தான். மீண்டும் ஒரு இக்கட்டான நிலை அவனுக்கு..

பிள்ளைக்கு பால்மா தேவைப்படுகிறது, மருத்துவ அறத்தின் பிரகாரம்  அவனால் குருதிக் கொடை வழங்க முடியாது. சும்மா போய் பால்மா பைக்கட்டு தாருங்கள் என்று கேட்க அந்தப் “போராளி” யால் முடியவில்லை. குருதிக் கொடை மூலம் பால்மாப் பைக்கட்டு வாங்க “மருத்துவனால்” இயலவில்லை. பால்மா பைக்கட்டு வாங்காமல் இருக்க “தகப்பனால்” முடியவில்லை. மும்முனை தாக்குதலால் திக்கு முக்காடினான் அவன். இறுதியில் போராளியும் தகப்பனும் வெல்ல மருத்துவன் பின் வாங்கினான். ஆம் குருதிக் கொடைக்கு அவன் புறப்பட்டான்.

தயங்கித் தயங்கி மருத்துவமனை அடைந்து, குருதிக் கொடை வழங்கிய பின் நிலையப் பொறுப்பதிகாரியான (In charge of blood bank 🩸) மருத்துவக் கலாநிதி திரு பாஸ்கரன் (கலை) அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவரோ கடுங்கோவத்துடன் அவனைத் திட்டினார். அவன் நிலை அறிந்து அடுத்த கணம் அடங்கினார். கொஞ்சம் பொறு என்று விட்டுப் போனவர் நேரம் கழித்து திரும்பினார். ஒரு கையில் இரு பால்மா பைக்கட்டுகள். மற்றக் கையில் பிளாஸ்டர்.

ஆம்.. குருதிக் கொடை மூலம் தானும் ஒரு பால்மா பைக்கட்டு பெற்று அவனுக்கு வழங்கினார். அவர் நினைத்திருந்தால் பால்மா பைக்கட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்திருக்கலாம். ஆனால் நெறி பிறழ்ந்து அப்படிக் கொடுக்கவில்லை. அவரால் கொடுக்க முடியவில்லை.. அந்தப் போராளியும் நேரடியாகப் போய் பால்மா தாருங்கள் என்று கேட்டிருக்கலாம். அறமற்று அவனாலும் கேட்க முடியவில்லை..

ஏனென்றால் அவர்கள் தகப்பன் பறவைகளான விடுதலைப் போராளிகள்.