கொப்பன் பேயனும்.. கொப்பன்ஹேஜனும்..

“நகைச்சுவை வாயிலாக உடல் உள செயற்பாடுகளை எழுச்சி பெறச்செய்து ஆற்றல் மிக்க கற்பித்தலை முன்னெடுக்கலாம்.”…

என நவாலியூர் சோமசுந்தரப்புலவர் திருவாய் மொழிந்த மொழிகளுடன் இந்தப் பதிவினை ஆரம்பிக்கின்றேன்.

 

அவர் நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்ற சமூகக்கல்வி ஆசிரியப் பெருந்தகை!

அவர் பாடம் தொடங்கி நிறைவு பெறும் போது எமக்கெல்லாம் சிரித்துச் சிரித்தே அடிவயிற்றில் நோவு எடுக்கும்.

“நாடுகளும் அதன் தலைநகர்களும்” எனும் தலைப்பில் படிப்பிக்கும் போது,

“கொப்பன்பேயன்” என்று சொல்வார்!

அந்த வாத்தி வி(மு)றைத்தபடி கண்களைப் பார்த்தே பாடம் சொல்வார்!

ஒரு முறை வாத்தி என்னருகே இருந்த எந்தன் நண்பனிடம் ‘கொப்பன்பேயன்’ எனச் சொன்னவுடன் எளிதில் உணர்ச்சி வயப்படும் குணவியல்பு கொண்ட (Short tempered) அவன் கோபப்பட்டதும் உண்டு!

ஆம்,

டென்மார்க் நாட்டின் தலைநகர் Copenhagen ஆகும்!

அந்த Copenhagen இனைத் தான்”கொப்பன்பேயன்”என்று சொல்லித் தந்தார்!

பதின்மப் பருவத்தில்(Teenage) பல வகையான எண்ணங்களால் நிரப்பப்பட்டிருக்கும்  எங்கள் மனதில் ஆழமாகப் பதியப்பட வேண்டும் என்பதற்காய் அவர் சொல்லிய பல நூறு நகைச் சுவைசார் கல்வியூட்டலில் இதுவும் ஒன்று ஆகும்.

காலங்கள் பல கடந்துவிட்டது.

காதோர முடியும் நரைத்துவிட்டது.

பதின்மத்தில் பாடமாக்கிய பல நாடுகளின் தலை நகரங்கள் மறந்துவிட்ட போதிலும் டென்மார்க் தலைநகர் மட்டும் நினைவில் சிரஞ்சீவியாகி நிற்கின்றது!

Teaching Art
*************

– வயவையூர் அறத்தலைவன்-