செங்காந்தள் – Glory lily (Gloriosa superba)
சங்க காலம் தொட்டே காந்தள் மலர் தமிழர் வாழ்வுடன் பிணைந்துள்ளது. குறிஞ்சிக்கடவுள் முருகனின் அடையாள மலராக அறியப்படும் காந்தள் மலர், இலக்கியங்களில் பெண்களின் செஞ்சாந்து பூசிய விரல்களுக்கு உவமையாகக் குறிப்பிடப்படுகிறது. இலக்கியங்கள் குறிப்பிடும் காந்தள், கோடல், தோன்றி மலர்களுக்கிடையிலான வேறுபாடு இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. கபிலர் காட்டும் 99 குறிஞ்சிப்பூக்களுள் ஒண்செங்காந்தள், கோடல், சுடர்ப்பூந்தோன்றி என மூன்று பெயர்களையும் தனித்தனியாகக் குறிப்பிடுகிறார். உரையாசிரியர்களும் தெளிவாகக் குழப்புகின்றனர். அந்தக் குழப்பத்துக்குள் நாம் நுழையாமல் பொதுவாய் செங்காந்தள் மலர் பற்றி இப்போது பார்ப்போம்.
காந்தள் மலரின் அறிவியல் பெயரான Gloriosa superba என்பதற்கு உன்னதப் பேரொளி கொண்டது என்று பொருள். பூவின் வண்ணம் மற்றும் வடிவம் காரணமாக ஆங்கிலத்தில் Flame lily, climbing lily, creeping lily, glory lily, gloriosa lily, tiger claw, fire lily என்ற பெயர்களும் தமிழில் அக்கினிசலம், காக்கைமூக்குப் பூ, இலாங்கினி, தலைச்சுருளி, பற்றி, தோன்றி என்றும் குறிப்பிடப்படுகிறது. கார்த்திகை மாதம் பூப்பதாலும் முருகனுக்கு உகந்த பூ என்பதாலும் கார்த்திகைப்பூ என்றும் கிழங்கின் வடிவம் கலப்பை போலிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்றும்,நச்சுத்தன்மை காரணமாக கண்வலிக்கிழங்கு என்றும் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு ஏறுகொடி வகையாகும்.
தமிழ்நாட்டின் மாநில மலரென்னும் சிறப்புடைய செங்காந்தள் மலர் தமிழீழத்தின் அடையாள மலராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தியாகத்தின் அடையாளமாகவும், மாவீரர் நினைவாகவும் ஈழமக்களின் உணர்வோடு ஒன்றிய மலராக கார்த்திகைப்பூ (எ) காந்தள் அடையாளப்படுத்தப்படுகிறது. செங்காந்தள் மலருக்கு ஜிம்பாப்வேயின் தேசிய மலர் என்ற பெருமையும் உண்டு. இதன் தாயகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா என்றாலும் இன்று அலங்காரச் செடியாகவோ, மருத்துவத் தாவரமாகவோ, நச்சுக்களையாகவோ உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணக்கிடைக்கின்றன. ஆப்பிரிக்கப் பாரம்பரிய மருத்துவத்தில் காந்தள் செடிக்குத் தனியிடம் உண்டு. பழங்குடிகள் இதன் நச்சினை ஈட்டிமுனைகளில் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர். அவர்களுடைய புனிதச்சடங்குகளில் பூக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
கிழங்கு மற்றும் விதைகளில் காணப்படும் கால்சிசின் (colchicine) என்னும் வேதிப்பொருளுக்காக தென்னிந்தியாவில் காந்தள் பெருமளவு பயிர்செய்யப்படுகிறது. இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் பாம்புக்கடி, ஆறாத ரணம், வெட்டுக்காயம், மூட்டுவலி, காலரா, குடற்புழுக்கள், சிறுநீரக நோய்கள், குஷ்டம், சுளுக்கு, மலட்டுத்தன்மை, பால்வினை நோய்கள் என பலதரப்பட்ட நோய்களுக்கும் இது மருந்தாகிறது . இலைச்சாறு பேன்தொல்லை போக்குகிறது. இதன் நச்சு நாய் பூனைகள் மற்றும் கால்நடைகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. கருக்கலைக்கவும், கொலை, தற்கொலைகளுக்கும் இது முன்னாளில் பயன்படுத்தப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
Gloriosa இனத்தில் 12 வகை உள்ளன. எல்லாமே அலங்காரப்பூக்கள் வடிவமைப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. கவிழ்ந்த நிலையில் நிலம் பார்த்துக் கூம்பியிருப்பது போலக் காணப்படும் காந்தள் மொட்டுகளின் இதழ்கள் விரியும்போது (சைக்ளமென் பூக்களைப் போல) பின்புறமாக மேல் நோக்கி விரிகின்றன. பூக்கள் விரியும் முன்பு பறிக்கப்படும் பூக்கள் பூங்கொத்து, பூச்சாடிகளில் ஒரு வாரத்துக்கு மேல் வாடாமல் அலங்கரித்திருக்கும்.
#பூக்கள்_அறிவோம்
#மலர்களே
-கீதா மதிவாணன் – அவுஸ்திரேலியா