நாளொரு குறள் – 20

249

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 10

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

இந்த அதிகாரத்தின் முதல் குரலிலேயே சொன்னார், நீரின்றி உலகங்கள் அமையாது. உலகங்கள் என்பது வெறும் கோள்கள் அல்ல. அவை உயிர்ப்புள்ளவை. உயிரினங்களைத் தன்னுள்ளே கொண்டவை. உயிர்களைக் கொண்ட உலகங்கள் நீரின்றி அமையாது. அப்படி நீர் இருந்தாலும் அது விண்ணிலிருந்து வரும் மழை நீராக இருந்தாலே ஒழுக்கம் அமையும்.

தேங்கிக் கிடக்கும் நீரினால் ஒழுக்கம் வளராது என்கிறார் வள்ளுவர். ஓடுகின்ற ஆற்றினால், தோண்டப்பட்ட கிணற்றினால் ஒழுக்கம் வளராதாம் ஏன்?

இவை எல்லாம் எல்லைகளுக்குட்பட்டவை. இவற்றை தனிமனிதர்கள் ஆதிக்கம் செய்வார்கள். மழை எனக்கு மட்டுமே உரியது என யாருக்கும் ஆதிக்கம் செய்ய மாட்டார்கள்.

அணைகளைக் கட்டி ஆற்று நீரை இன்று கபளீகரம் செய்கிறார்கள். ஆள்துளைக் கிணறு வெட்டி கபளீகரம் செய்கிறார்கள். ஆனால் மழை நீரை இப்படி யாராலும் ஆதிக்கம் செய்ய முடிவதில்லை.

அப்படிப்பட்ட மழை பொய்த்தால், ஒழுக்கம் காணாமல் போய்விடும். வரலாற்றில் பல பஞ்ச காலங்களில் ஒழுக்கங்கள் காணாமல் போனதை நாமும் படித்தே இருக்கிறோம். வானம் ஒழுகுவது நின்றால் மானமும் ஒழுக்கமும் நின்றுவிடும்.