பேசாப் பொருட்களை பேசும் அருளோவியம்

382

அருகிருந்து கண்டோருக்கு இது அருளோவியம். தொலை நோக்கருக்கோ இது தமிழர் குரலோவியம்.

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் ஔவையார்.

வரிகளில் விளங்கிடாப் பொருளை நிற அடிகளில் இலகுவாய் விளங்கிடலாம் அல்லவா? ஆதியன் மொழியாய் இருந்ததும் ஓவியம் அல்லவா?

குறுகத்தரித்த குறளுக்கு குறளோவியம் தீட்டியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

திருக்குறள்களின் நீட்சியாக எழுதப்பட்ட திரு அருள் அவர்களும் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் பகட்டிய தமிழர் குரல்தான்.

அவரின் நினைவாக வரையப்பட்டுள்ளது இந்த அருளோவியம். இந்த ஓவியமும் திரு.அருளைப் போலவே பன் நுண் புலங்களைக் கொண்டதாகவே உள்ளது.

அருளோவியம் அழகியதொரு சொல்லோவியம். அருள் எனும் ஓவியம்; அருள் கொண்டு வரைந்த ஓவியம்; அருளால் அருளப்பட்ட ஓவியம்; அருளுக்கு படைக்கப்பட்ட ஓவியம் என்ற நீளாழ் அர்த்தங்கள் பொதிந்தது இந்த அருளோவியம்.

ஆனாலும், முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், திருவாழும் அருள் எனும் தூரிகை கொண்டு விடுதலைப் போராளிகளின் அகங்கள் பக்கங்கள் தோறும் வரைப்பட்டுள்ளன.

பக்கங்களைத் திருப்பத் திருப்ப கண்கள் பருகுவதென்னவோ ஓவியங்களை அல்ல. கடந்த காலக் கள நிலைகளைத்தான்.

காதுகள் கேட்பதென்னவோ நெல் வயல் காறறின் கதைகளையும் அருவிகளின் பாட்டு ஓசையையும் தேய்ந்தளவில் குண்டுச் சத்தங்களையும்தான்..

நாசிகளில் படிவதென்னவோ தெல்லிப்பளை மருத்துவமனை மருந்து நெடியும், காருண்ணியத்தின் வாசனையும்தான்..

நாவில் நிலைப்பது உடல் தடவிச் சென்ற கூதல் காற்று நாவில் விட்டுச் சென்ற குளுமைதான்.

உடலில் படர்வது இயற்கையும் விலங்கினமும் தந்த குறு குறுப்புக் கரும்புச்சுவைதான்..

ஆம்! எங்கள் வீரமும் தீரமும் பேசப்பட்டது. அதற்கு வேறு பெயர்களும் சூட்டப்பட்டது. ஆனால் மென்மையில் பிறந்த வன்மை அல்ல எங்கள் வீரம்; மென்மையில் கசியும் ஈரமே எங்கள் மாவீரம் என்பதை அழுத்தம் திருத்தமாக அடித்துக் கூறுகிறது அருளோவியம்.

மகத்துவர் அருள் ஆண்டவனால் எமக்கருளப்பட்ட பேரருள். எங்கள் கண் முன் நின்றுலாவிய வெண் சமரர்களின் மொத்த உரு.

படிக்கப்பட வேண்டிய நூலல்ல அருளோவியம்; மனதாழப் பதிக்கப்பட வேண்டிய தடயம்.

பதிப்போம்

மோகனனே – இனியும்
மேதினியின் மீதினிலே
நிண்டுலாவிடும் உந்தன்
நீள நினைவுகள்!