நாள் தோறும் நான்
வானம் பார்க்கிறேன்…
ம்… உண்மைதான்…
ஆதாரம் அதுதான்
இம்மண்ணுலகின் அத்தனைக்கும்…
இது என் நம்பிக்கை மட்டுமல்ல…
ஆனாலும் அவ்வப்போது
வழிப்போக்கன்போல் கடந்துபோகும்
கருநிற மேகத்திரள்கள் தரும்
தனிமை நிழல்களில் சுயநலம்
இளைப்பாறிக் கொள்கிறது….
‘சூரிய அஸ்தமனத்தின்’ பின் உண்டான
இருள் தரும் பயத்தைக் காரணம்காட்டிப்
பாய்போட்டுத் தூங்க நினைத்துக் கொள்கிறது பொதுநலம்!
நேர்மை இனிமேல் நேர்கோட்டில் பயணிக்கத் தீர்மானமின்றி வளைந்து நெளிந்தோடத் தயாராகிவிட்டது…
உண்மை, சத்தியமெல்லாம் தமக்கேற்றாற்போல்
உருமாற்றம் செய்யத் துணிந்துகொண்டு பொய்மைகளைச் சகித்துக்கொண்டு சகவாசம் செய்யத்தொடங்கிவிட்டன!
தியாகம், ஈகம் என்பனவெல்லாம் நல்லதொரு விற்பனைச் சரக்குகளாய் ‘அங்குமிங்கும்’ மேடையேறி எகபோக உரிமையுடன் கிட்டத்தட்ட விற்றுத் தீரும் நிலையையும் எட்டிவிட்டன…
வன்மங்களும், கயமைகளும், சிரித்துக்கொண்டே சபையேறி முதுகில் குத்திக் கிழிக்கும் காட்டேறிகளாய் இரத்தம் ருசிக்கத் தொடங்கிவிட்டன….
முருங்கமரத்து வேதாளங்கள்
பல முறுக்கேறியபடி
வேதமோதித் திரிகின்றன…
காடு, களனியெல்லாம்
கருகிப்போய் நீண்ட
நாட்களாகிவிட்டது…
சமூகத்தைச் சிதறு துண்டுகளாக்கி,
தலைப்பாகைக் கனவுகளோடு
கதிரையின் கால்களை நக்கிப்பிழைக்கத்
தொடங்கிவிட்டது பதவிமோக வஞ்சகம்…
‘இருள்’ இன்னுமும் தன்
கால்நகங்களால் விடுதலை
உயிர்களை அழுத்திப் பிடித்தபடி
தன்கோரப் பற்ககளால் கொத்திக்
கிழித்துப் பசிதீர்த்துக்கொள்கிறது…
தெளிவதாய் இன்னமும்
வானம் இல்லை, ஆயினும்
நம்பிக்கை தெளிவானதாய்…
என்னோடு வரிசையில்
காத்திருந்தபடி வெகுசிலரே….!
-காந்தள்-