சாவின் பின்னும் வாழ்வதில் உள்ளது வாழ்க்கை.
சாவின் பின்னான வாழ்வை சொர்க்கம் என்றும் நரகம் என்றும் கூறுகிறார்கள் பக்திமான்கள். நன்மை செய்தால் சொர்க்கம் சேரலாம்; தீமை செய்தால் நரகம் சேரலாம் என்பது இவர்கள் வாதம்.
சாவின் பின் மக்கள் மனங்களில் நன்மதிப்புடன் வாழ்தலை சொர்க்கத்துக்கு ஈடாகவும் கெடுமதிப்புடன் வாழ்தலை நரகத்திற்கு நிகராகவும் வகுப்பர் கடவுள் மறுப்பாளர்கள்..
எது எப்படியோ சாவின் பின்னான வாழ்தலை எவரும் மறுதலித்ததில்லை..
இல்லறத்தில் சண்டை வருவதற்கு முக்கிய காரணம் வசதிக் குறைபாடு என்பார் என் முது வயது நண்பரொருவர். வசதியின்மை இருந்தாலும் விரிசலில்லா இல்லறம் மேற்கொண்டோர் என்னைப் பொறுத்தமட்டில் சாவின் பின்னும் சந்ததியில் வாழ்வர்.
நாசத்தின் முதல் துளி ஆசை மிகுதி என்பார்கள். தேவைக்கேற்ப ஆசைப்பட்டு முயன்று அடைந்தவர் சாவின் பின்னும் சந்ததி கடந்து வாழ்வர்..
பெண்ணை மதிக்காதோர் கண்ணை இழந்தாராவார்.. பெண்ணை மதித்து நடந்தவரும், மனைவி, துணைவி என்பதை எல்லாம் மறந்து இணை என எண்ணி இல்லறம் நாட்டியோர் சாவின் பின்னும் உலகில் வாழ்வர்.
அகமும் புறமும் சமத்துவம் ஓங்க, பிள்ளைகள் முதல் ஊரார் வரை ஓரவஞ்சனை காட்டாதோர் சாவின் பின்னும் உற்றார் மனங்களில் வாழ்வர்.
காயிருப்ப கனி சுவைக்கா ஔவையின் வழியில் இன்மொழிதல் புரிந்து, சமுதாய நோக்குடன் அனைவரையும் அரவணைத்து, அழுக்காறு விரட்டி, பேதங்கள் வீழ்த்தி வாழ்ந்து செத்தவர் சாவின் பின்னும் வையம் உள்ளவரை வாழ்வர்.
நீங்கள் வாழ்கிறீர்கள் ஐயா. நீங்கள் இறந்து ஆண்டுகள் ஆறாகி விட்டாலும் நாங்கள் உங்களை இழக்கவில்லை. என்றும் எங்களோடு நீங்கள்.. நெக்குருகும் நெஞ்சோடு நாங்கள்..