ஆனைக்கொரு காலம் வந்தால்..

543

இறைவனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. வலியான் எளியானை இழித்தலும், எளியான் வலியாகி புதிதாய்ப் பிறத்தலும், எள்யான் வலியான் முன் நேரானவனாய் வகித்தலுமாக காலம் தன் கடமையைச் செய்கிறது.

நாம் ஒதுக்கி வைத்த பழையது ஒரு நேரம் எமக்கு பயனாவதும், நாம் மிதிக்கும் மனிதர்கள் ஒரு தருணம் எமக்கு இனிப்பதும் காலத்தின் திருவிளையாடலே..

இதை அறியா மனிதராய் நாங்கள் செய்யும் அலப்பறையைக் குறைக்க நம் முன்னோர் கூறி வைத்ததே ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

உலகில் எத்தனையோ உயிரிகள் இருக்க ஆனையையும் பூனையையும் ஏன் ஒப்பிட்டுக் கூற வேண்டும்? எதுகை மோனைக்காக வக்கணையாக வளைத்தார்களா சொல்லை? பலத்தை வைத்து ஒப்புமைப்படுத்தினார்களா? சிங்கம் புலி எல்லாம் தாண்டி கழனியில் தமிழன் கால் வைத்த வேளை உதித்தால் ஆனையும் பூனையும் பழமொழிக்குள் வந்திருக்கும்.

ஆனை கட்டிப் போரடித்த தமிழன் போரடித்த நெல்லை சேமிப்புக் கிடங்கில் வைக்க எலி தன் வேலை காட்டும். எலியை வேட்டையாட பூனையை (பூனையின் வேட்டை – காலம்) களம் இறக்குவான். அதனால் ஆனையும் பூனையும் பழமொழிக்குள் புகுந்திருக்கலாம்.

இன்னொரு ஊகமும் உண்டு.. ஆநிரை மேய்த்தலும் தேனெடுத்தலும் தமிழன் நானிலப் பரிணாமத்தில் செய்யப்பட்ட தொழில்கள். கால மாற்றத்தால் ஏற்பட்டவை இந்த நானில உருவாக்கம். அதனை கணக்கிட்டும் இந்தப் பழமொழி பிறந்திருக்கலாம்.

ஆதித்தமிழனின் வாயிலிருந்து வந்த ஆ நெய் (மாட்டு நெய்) ஆனையாக நம் காதில் நுழைந்திருக்கலாம். அதே போல் அவன் வாயிலிருந்து ஒழுகிய பூ நெய் (தேன்) பூனையாக எங்கள் காதில் விழுந்திருக்கலாம். அதாவது ஆ நெய்க்கு ஒரு காலம்.. பூ நெய்க்கு ஒரு காலம் என்பது மருவி ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் ஆகி இருக்கலாம்..

சாப்பாட்டுப் பிரியராக நீங்கள் இருந்தால் நெய் சாப்பிட்டுப் படிந்த கொழுப்பை தேன் குடித்துக் கரைக்க வேண்டி இருக்கும் என்று கூற இந்தப் பழ மொழிக்கு அர்த்தம் கொள்ளலாம்.

எது எப்படியே கடுகுக்குள் பெரும் பொருளையும் பன் முகத்தையும் புகுத்தி வைத்த தமிழையும் தமிழனையும் கொண்டாடத்தான் வேண்டும்.