வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – ஐயோ

562

கலிலியோ.. 1610 ல் தன்னுடைய தொலைநோக்கியை குருவைப் பார்த்து திருப்பிய போது நாலு சந்திரன்களைக் கண்டறிந்தார். இவை நாலும் கலிலியோவின் சந்திரன்கள் என அழைக்கப்படுகின்றன. இதை வச்சுதான் பூமிதான் நடுசெண்டர்ல இருக்கு அப்படிங்கற வாதத்தையே உடைச்சார் கலிலியோ.

அந்த நாலு மூணுகள் (அய்ய, சந்திரன்களப்பா)

ஐயோ (தெரியுமே! உங்களுக்குச் சிரிப்பு வருமே,, அதைப் பத்தி படிக்கும் போது சரியான பேர்தான்னு சொல்லுவீங்க..)

யூரோப்பா
கேனிமீட்
கலிஸ்டோ

ஐயோ!!

குருவிலிருந்து சராசரி தூரம் : 421,700 km
ஆரத்தின் அளவு : 1821 கிலோ மீட்டர்கள்
குருவிலிருந்து 5 வது சந்திரன்..
குருவைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 42 மணி நேரம்
தன்னைத் தானே சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் 42 மணி நேரம்

படத்தைப் பார்த்தீங்கள்ள.. கலரைப் பார்த்த உடனே என்ன தோணுது?

ஆமாங்க ஆமாம்.. கலரைப் பார்த்த உடனே புரியவேண்டியது ஐயோ வில் எக்கச்சக்கமா எரிமலைகள் இருக்கு. அவற்றில் சில பல இன்னும் நெருப்பைக் கக்கிகிட்டும் இருக்கு.

வாயேஜர் இந்தச் சந்திரனை எட்டிப் பார்த்தப்ப எதிர் பார்த்தது சரி ஐயோ நம்ம நிலா மாதிரி குண்டும் குழியுமா இருக்கும்னு. ஆனா முன்னூறு கிலோ மீட்டர் உயரத்துக்கு அக்னிக் குழம்பைக் கக்கும் எரிமலைகள் இருக்கும்னு யாருமே நினைக்கவே இல்ல. எக்கச்சக்கமான எர்மலையின் வாய்கள் அக்னி ஜொள்ளு விடுவதை இங்க பார்க்கலாம்.

அதுவும் வாயேஜர் 1 போய், வாயேஜர் 2 வர்ரதுக்குள்ள எக்கச் சக்க எரிமலைகள் அணைந்து போக புதுசா எக்கச் சக்க எரிமலைகள் உண்டாகி இருந்தது.

எரிமலைகளின் வாய் பல கிலோமீட்டர்கள் ஆழம் உள்ளது. (உங்க வாயை போட்டிக்குப் பிளக்காதீங்க.. உங்களால அதோட போட்டிப் போட முடியாது   ) அங்கே அடியாழத்தில் உருகிய கந்தக ஆக்சைடு ஏரிகளே இருக்காம். (அதனால தான் அந்தக் கலர்)

ஐயோ வின் சில இடங்களில் வெப்பநிலை 2000 கெல்வின் ஆகவும்(எரிமலை வாய்கள்), சில இடங்களில் 130 கெல்வின் ஆகவும் இருக்காம்.

ஐயோவில் 100 லிருந்து 150 மலைத் தொடர்கள் வரை இருக்கலாம்னு சொல்றாங்க. ஐயோவில் தென் துருவப் பகுதியில் இருக்கற மலை நம்ம எவரெஸ்டை இமயமலையை விட இரண்டு மடங்கு உயரமானது. சாதாரணமா மலைகள் 6 கி.மீ உயரமும் (எவரெஸ்ட் 8.5 கிலோ மீட்டர் உயரம்னு வச்சுக்குங்க.) 150 கிலோ மீட்டர் நீளமும் இருக்கு, மலைகள் உருவாகக் காரணம் டெக்டானிக் தகடுகள் நகருவதுதான்னு யூகிக்கிறாங்க.

இதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது ஐயோ ரொம்பச் சின்ன வயசு சந்திரன்னு சொல்லலாம்.

ஐயோ என்பது கிரேக்க கடவுள்களின் தலைவன் ஜூயூஸோட சின்ன வீடு, தன் மனைவிக்குத் தெரியாம இளம் பசுங்கன்று உருவத்தில் பதுக்கி வச்சிருப்பதா சொல்வாங்க. நம்ம புராணத்தில எமனோட மனைவி.

இத்தனை எரிமலைகள் இருந்தா என்னாகும்? அங்க இருக்கிற காத்தெல்லாம் சல்ஃபர் டை ஆக்சைடு தாங்க. இது மிக அழுத்தமான ஆனால் மெல்லிய வாய்மண்டலம் கொண்டது. அதனால இங்க ஒரு செயற்கைக் கோள் இறங்கணும்னா.. மெல்ல ராக்கெட் வேகம் குறைச்சி ரிவர்ஸ்ல மெது மெதுவா இறங்கணும்..

இன்னொரு முக்கியமான விஷயம்

இந்த் ஐயோ குருவைச் சுற்றி வரும்போது குருவோட காந்தப் புலத்தை வெட்டி வருகிறது. இதனால என்ன உண்டாகும்? ஆமாங்க ஆமாம். மின்சாரம் தான். இதனால் உண்டாகும் வெப்பம் குறைவுதான். ஆனால் உண்டாகும் மின்சாரம் 1 ட்ரில்லியன் வாட்ஸூக்கு மேலயே இருக்கும்னு சொல்றாங்க. (இப்ப உண்மையாவே ஐயோன்னு சொல்லத் தோணுதில்ல?

படத்தைப் பாருங்க..

இதனால ஹெவெல்ஸ் சர்க்யூட் பிரேக்கர் விளம்பரத்தில் ஷாக்கடிச்சி நிக்கிற முடிகள் மாதிரி ஐயோ வில் உள்ள துகள்கள் நட்டுகிட்டு ஐயோவை விட்டு விலகிப் போகுது… இதனாலும் குருவின் காந்தப் புலம் அதிகரிக்குது.

ஐயோவை கிரகண காலத்தில் (அதாவது குருவின் நிழலில் இருந்த காலத்தில் புடிச்ச ஃபோட்டோவைப் பார்த்தீங்கன்னா புரியும்..

எப்படி ஒளிருது பாத்தீங்கல்ல.

ஐயோவின் உட்புறம் எப்படி இருக்கும்?

இரும்பும் நிக்கலும் கலந்த உலோக திட உட்கரு, அதற்கு மேல் சிலிகேட்டினால் ஆன பாறைக்குழம்பு/பாறை/மணல் பகுதிகள் கொண்டது.

ஐயோ, யூரோப்பா இரண்டும் ஏறத்தாழ ஒரே சைஸ்..

ஐயோ, யூரோப்பா, கனிமீட் மூணும் ஒத்திசைவு கொண்ட சுற்றும் வேகம் உள்ளவை..

கனிமீட் 1 சுத்து சுத்தினா, யூரோப்பா இரண்டு சுத்தும், ஐயோ நாலு சுத்தும் சுத்தும்.

சரி சரி அடுத்து நாம் யூரோப்பாவைப் பார்ப்போம்..

தொடரும்