கிரிக்கெட் பாடங்கள் : தோனியின் நிர்வாகவியல் – 2

496

பாடம் இரண்டு:

முழுத் திட்டம் என்றும் மனதில் இருக்கட்டும்.

சூடான விஷயம் இந்திய ஆஸ்திரேலிய ஐந்து நாள் போட்டியில் நேற்று இந்தியா விளையாடிய விதம். ஆஃப் சைடில் எட்டு வீரர்கள். லெக் சைடில் ஒருவரே ஒருவர். ஆஃப் சைடில் ஸ்டம்பிற்கு தூரத்த்தில் செல்லுமாறு மட்டுமே பந்துகள் வீசப்பட ஓட்டங்கள் குறைந்தன. 

இது பலரின் மனதில் தடுமாற்றத்தை எழுப்பி விட்டது. என்னடா இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்திரேலியா காப்பு ஆட்டம் ஆடுகிறது என்று சொன்னார்கள். இன்று யார் காப்பு ஆட்டம் ஆடுகிறார்கள் பார் அப்படின்னு ஆஸ்திரேலிய வீரர்கள் மனதில் இனம்புரியாத சில உணர்வுகள். சைமன் கடிச் வெகுவாகவே எரிச்சலடைந்தார். இயான் சேப்பல் இப்படிப் பட்ட வியூகங்களை ஐசிசி தடைசெய்ய வேண்டும் எனக் குரல் எழுப்புகிறார்.

நிற்க… கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம். ஒரு நாலு நாள் முன்னர்தான் கில்கிறிஸ்ட் தன் சுயசரிதைப் புத்தகத்தில் நம் தங்கக் கண்மணி முரளிதரன் விஷயத்தைப் பற்றி எழுதி இருந்தார். சுழல் பந்து வீசும் பொழுது முரளிதரன் முழங்கை ஏழு டிகிரிகள் வளைகிறது என்றும்… ஆனால் சிறிது காலத்தில் சுழல் பந்து வீசும் பொழுது பத்து டிகிரிகள் வரைக் கைகள் வளையலாம் என விதிகள் மாற்றப்பட்டன எனவும் எழுதினார். விதிகளை வளைப்பது என்பது கோழைத்தனமான செயல் என்று சொன்னார். தயவு செய்து அந்தப் புத்தகத்தின் பிரதியை இயான் சேப்பலுக்கு அனுப்பவும். (இப்படி கவாஸ்கர் சொன்னாலும் சொல்வார்..)

இது மட்டுமல்ல. இந்தியாவிற்கு இருந்த இரண்டு நீண்ட அவப்பெயர்களை மாற்றி இருக்கிறார் இந்தத் தொடரில்.

1. இந்தியா போன்ற உபகண்ட நாடுகளில் ஆடுகளத்தைச் சுழல் பந்துக்குச் சாதகமாகத் தயாரிக்கிறார்கள். வேகப் பந்து வீச்சாளர்களினால் அதில் பிரகாசிக்க முடியாது.. எல்லா ஆடுகளமும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும்.

இதைச் சொன்னதும் அதே ஆஸ்திரேலியர்கள் தான். அதே இந்தியாவில் அதே போன்று சுழல் பந்துக்குச் சாதகமான ஆடுகளத்தில் இன்று வேகப் பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மாவையும், ஜாகீர் கானையும் பார்த்து மிரள்கிறார்கள் ஆஸ்திரேலியர்கள். தவற விட்ட வாய்ப்புகளைக் கணக்கிலெடுத்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வரை பறித்திருக்கக் கூடும். ஆக ஆடத் தெரியாதவள் கூடம் கோணலென்றாளாம் என்று இந்திய அணி தற்போது தைரியமாகச் சொல்லலாம் இல்லையா? 

ஆமாம் ஆமாம் என்று வல்லுனர்கள் சொன்னபோதிலும் தோனியின் நம்பிக்கை, அவரின் திட்டங்கள் இந்த நிலையை உண்டாக்கி உள்ளன.

ரிவர்ஸ் ஸ்விங்:: இன்று ஆஸ்திரேலியா வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது. நீண்ட நாட்களுக்கு முன் பாகிஸ்தான் இதை தனது பரம்பரைச் சொத்தாக வைத்திருந்தது. இதை இந்தியர்கள் பரீட்சை செய்தாலும் இவ்வளவு சரியாக உபயோகிப்பது இதுவே முதல் முறை. முதல் போட்டியிலேயே இந்த ரிவர்ஸ் ஸ்விங் ஆஸ்திரேலியாவை சற்று பயமுறுத்தினாலும் தோனி தலைமையேற்ற இரண்டாவது போட்டியில்தான் ஆயுதமாக உபயோகப்படுத்தப் பட்டது. 

இதன் மூலம் தோனி என்ன முயற்சித்து இருப்பார்?

சற்றே நிதானிக்க, ஆடுகளம் என்னதான் சுழல்பந்துக்கு ஆதரவாக இருந்தாலும் அடித்து ஆடுவதற்கு ஏற்றதாய் இருக்கிறது. முதலிரண்டு நாட்கள் இந்தியா ஆடியது வேகமாகத்தான். ஆனால் இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் யோசிக்க வைத்தது.

வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் மடத்தனமாக சுவரில் போய் முட்டிக் கொள்ளாமல் தோனி யோசித்து இருக்கிறார். ஆஸ்திரேலியா மிகப் பெரிய ஸ்கோரை எட்டினால் வெற்றி எட்டாக்கனி. ஆகவே ஓட்ட வேகத்தைக் குறைக்க வேண்டும். அதே சமயம் மூன்றாம் நாளுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டவேண்டும். எப்போது விக்கெட்டுகள் கிடைக்கும்? மட்டையாளர்கள் நிதானமிழக்கும் பொழுது. ஆகவே வியூகம் வகுத்தார். செயல்படுத்தினார். இதே அணுகுமுறை ஐந்தாம் நாள் இருக்காது. இன்று இந்திய அணி எடுக்கும் ஓட்டங்களைக் கொண்டு நாளைய வியூகம் மாறும்.

ஆக ஒரே காரியத்தில் பல விஷயங்களை அழகாகக் கோர்த்துச் செல்கிறார். பலருக்கு இவை புரிவதில்லை. 

ஆக கிரிக்கெட் என்பது ஆடுகளத்தில் மட்டுமல்ல.. மூளையிலும் ஆடப்படவேண்டிய விளையாட்டு என்பதை வெகுத் தெளிவாக காட்டி இருக்கிறார் எப்படி விளையாடுவது என்றும் காட்டி இருக்கிறார்.

ஆக வெற்றி, அல்லது குறைந்த பட்சம் டிரா என இரு திட்டங்கள். ஒவ்வொரு நாள் இறுதியில் இந்த நிலை இருக்க வேண்டும் என்ற திட்டங்கள் தோனி மனதில் இருந்து கொண்டே இருப்பது நாள் முடிவில் தோனி தரும் பேட்டிகளில் தெரிந்து கொண்டே இருக்கிறது. பலரது அனுபவங்களை உத்திகளைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பது தெரிகிறது. திட்டம் தெளிவு. இலக்கு தெளிவு.. ஐந்து நாட்களில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. இன்று என்ன சாதிக்க வேண்டும் என்றத் தெளிவு இருக்கிறது. இந்த 2 மணி நேரம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. இந்த நிமிஷம் என்ன செய்யலாம் என்ற திட்டம் யோசிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தத் தெளிவு தான் தலைமைப் பண்பின் மிகப் பெரிய பலமாகும்.

இன்னும் வரும்