நாள் : 73
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :3
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
இதற்கு பரிமேலழகர் சொல்வார்,
பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பினை, அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
சாலமன் பாப்பையா சொல்வார், உயிர் உடலோடு கொண்டிருக்கும் தொடர்பிற்குக் காரணம் அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.
உடலுக்கும் உயிருக்கும் என்ன தொடர்பு?
உடலின்றி உயிரில்லை. உயிரின்றி உடலில்லை.
ஒன்றின்றி மற்றொன்றிற்கு பொருளில்லை. வாழ்வில்லை.
அதே போன்ற தொடர்பே அன்பிற்கும் வாழ்விற்கும் உண்டாம்.
வாழ்வென்னும் உடலுக்கு அன்பே உயிர்.
அன்பில்லா வாழ்க்கை சவத்திற்குச் சமம். அது அழுகும், வீச்சமெடுக்கும், அழியும்.
ஆக உயிரின் தொடர்பினால் உயிர்ப்பு பெறுதலைப் போல, இல்லற வாழ்வு உயிர்ப்போடு இருத்தல் அன்புடன் அது கொள்ளும் தொடர்பினாலேயே ஆகும்.
அன்பு உயிர்.