நாளொரு குறள் – பொருளுடன் – 79

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :9

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

உடலில் மிகச்சிறந்த உறுப்பு எது?

தலை என்பார் கற்போரும் கற்றோரும். தமிழில் தலை என்றால் முதன்மையானது, மேன்மையானது என்ற பொருளும் தமிழில் உண்டு.

காரணம், புலனறிவுகளில் ஐந்தில் நான்கிற்கு அவசியமான கண், காது, மூக்கு, வாய் ஆகியவை தலையிலேயே அமைந்துள்ளன.

இனத நான் கில் மிக உயர்ந்ததாய் கண்ணைச் சொல்வார்கள். குழந்தைகளை கொஞ்சும் பொழுதுகூட கண்ணே என்றுதான் கொஞ்சுவார்கள்.

ஐம்பொறிகளில் சுவாச மண்டலம், வாய், கை, கால், ஜீரணமண்டலம் என ஐந்து உண்டு. இப்படி புற உறுப்புகள் அனைத்தும் மிக நன்றாக இருப்பவனை முழுமனிதன் என்றும் எதிலாவது குறை உள்ளவனை ஊனமுற்றவன் என்றும் சமூகம் சொல்லும்.

ஆனால்,

மனிதன் என்ற பெயர் வரக் காரணமே மனம் என்னும் அகப்பகுதி தானே.

அகமனித உடலான மனதிற்கு உறுப்புகள் உண்டா?

உண்டு என்கிறார் வள்ளுவர்.

உணர்வுகளே அந்த உறுப்புகள். அன்பு, பாசம், காதல், வெறுப்பு, கோபம், அசூயை இப்படி பல உறுப்புகள் உண்டு என்கிறார் வள்ளுவர்.

இவ்வளவு உறுப்புகளில் தலை சிறந்த முக்கியமான உறுப்பு மனதின் உறுப்பாகிய அன்பு என்கிற உறுப்பாகிறது.

மனம் இல்லாதவன் மனிதனே இல்லை.

அன்புதான் மனதின் முக்கியமான உறுப்பு என்பதால் அன்பில்லாதவனும் மனிதனே இல்லை.