வயவையூரின் முற்போக்குச் சிந்தனையும் முன்னுதாரணமும்

1206

1989 இன் பிற்பகுதியில் தமிழகத்தில் முளைவிட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்கள் இன்று இந்தியா முழுவதும் கிளைபரப்பி உள்ளது. இக்குழுக்களின் முதன்மை நோக்கம் பெண்களின் பொருளாதா நிலையை ஸ்திரப்படுத்தலும் அதன் மூலம் மறுக்கப்படும் பெண்ணுரிமையை மீட்டெடுத்தலும் ஆகும். இப்ப இது எதுக்கு என்கிறீர்களா.. கொஞ்சம் பொறுங்கள்… பிரான்சுக்கும் ஏனைய மேலைத்தேச நாடுகளுக்கும் இரண்டு நிமிடம் போய் விட்டுப் பின் அந்தக் கால வயாவிளானுக்குள் நுழைந்து இந்தக்கால வயவையூரால் வெளியே வருவோம்..

பிரான்சில் பெண்கள் வேலைத்தளங்களில் மிகவும் மன அமைதி அற்ற நிலையிலும், கவனக் குறைவாகவும் காணப்படுகிறார்களாம். அதற்குக் காரணம் வீட்டுச்சுமையாம். பிள்ளைகள், ஏனைய வீட்டுப் பொறுப்புகள் என அவர்கள் மனசு அழுத்தப்படுகிறதாம். அதனால் பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணி புரியலாம் என்ற நடைமுறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்கண்டினேவிய நாடுகளில் இது பெரியளவில் வரவேற்பு பெற்ற ஒன்றாகவும் உள்ளது. (இது வித பெண்னடக்குமுறை எனும் வகுப்பு வாதமும் உண்டு. அதை அடுத்தடுத்த கிழமைகளில் உரையாடுவோம்)

வெளிநாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளில் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்து வருமானம் ஈட்டுவதைக் காண்கிறோம்.

மேலே சொன்ன மூன்று நல்விடயங்களும் 1985 ஆம் ஆண்டே வயவையூரில் இருந்தன. இதைவிட அதிக முற்போக்குடன் இருந்தன.

ஆலைகளும் கல்விச் சாலைகளும் நிறைந்த வயவையூரில் 1985 ஆன் ஆண்டளவில் “கோல்டன் தேயிலைக் கொம்பனி” அமைக்கப்பட்டது. (இதுபற்றி விபரமாக வயவையூரின் ஆலைகளும் சாலைகளும் எனும் தலைப்பில் பிறகு பார்க்கலாம்) பெயரில் தேயிலை மட்டும் இருந்தாலும் கற்பூரம், சாம்பிராணிக் குச்சி போன்றனவும் தயாரிக்கப்பட்ட கைத்தொழிற்சாலையான இது மேலே சொன்ன மூன்று நல்விடயங்களுக்கும் வித்திட்டது. (2016 ஆம் ஆண்டு வயாவிளான் மக்கள் ஒன்றியம் – பிரான்சு நடத்திய ஒன்றுகூடலில் இந்நிறுவன நடத்துனர் குடும்பத்திற்கு மதிப்பளிக்கப்பட்டதாக நினைவு)

இந்நிறுவனத்தில் பணியாற்றியோரில் பெரும்பான்மையினர் பெண்கள். அப்பெண்கள் சிறு சிறு குழுக்களாக ஒன்றிணைந்து குழுமனப்பாங்குடன் “பெண்கள் சுய உதவிக் குழுக்கள்” போல் வேலை செய்தனர். அதாவது 1985 ஆம் ஆண்டே பெண்கள் சுய உதவிக்குழுக்கள் வயவையில் இயங்கி இருக்கின்றன, கோல்டன் ஸ்ரார் நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன்.

இதே கோல்டன் ஸ்ராரில் வீட்டிலிருந்தபடியே பெண்கள் வேலை பார்த்தார்கள். சாம்பிராணிக் குச்சிகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை கோல்டன் ஸ்ரார் கொடுக்கும். பெண்கள் அதனை வீட்டுக்குக் கொண்டு செல்வர். வீட்டு வேலைகளும் பிள்ளைகள் பராமரிப்பும் செய்து கொண்டு ஓய்வு நேரங்களில் சாம்பிராணிக் குச்சிகள் சுத்துவார்கள். சுத்தியவற்றை கோல்டன் ஸ்ராரிடம் கொடுத்ததும் எண்ணிக்கை ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

இதே போல் அமரர் கந்தசாமி அவர்கள் தன் சுருட்டு கொட்டிலில் சுத்தப்பட்ட சுத்துகளை வீடுகளுக்குக் கொடுத்து விட்டு, கோடாப் போடுவித்தார்; பட்டி (லேபிள்) ஒட்டுவித்தார்; பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார். என் நினைவுக்கும் அறிவிக்கும் எட்டிய வரையில் வீட்டிலிருந்து வேலை செய்து வருமானம் பெற்ற பெண்களை உருவாக்கியவர்களில் முன்னோடியாக இவரைக் காண்கிறேன். மேலும் ஆண்களுக்கு சுருட்டுத் தொழில் வாய்ப்பு வழங்கியவரும் இவரே. வெளியூரிலிருந்து வயவையூருக்கு வருவோருக்கு அடையாளம் சொல்லும் அளவுக்கு இவருடைய சுருட்டுக் கொட்டில் பிரபல்யமானது. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 1970 இல் புகையிலையைக் கொள்வனவு செய்து, அதனைத் தூளாக்கும் பணியை பெண்களைக் கொண்டு செய்வித்து, அவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும் வசதியைக் கொடுத்து, வயவையூருக்குப் பெருமை சேர்த்தார்.

இந்த இடத்தில் வயவையூர், திருமதி உலகநாதன் அவர்கள் நடாத்திய நெசவுத் தொழிற்சாலை, வயவையூர்ப் பெண்களுக்கு வழங்கிய நெசவுத் தொழிற்பயிற்சியையும், பயிற்சி பெற்ற பெண்கள் வீட்டில் இருந்தபடி பெண்கள் நெய்ததையும் நினைவுகூறலாம். இவரைப் போல் 1973 ஆம் ஆண்டளவில், தற்போது பிரான்சில் வசித்து வரும் திரு.வதனகுமார் அவர்களின் தாயார் பூபதி அம்மா அவர்கள் பீடி சுத்தும் கைத்தொழிலை நடத்தினார். இவருடன் தொழில் புரிந்தவர்கள் பலரும் பெண்களே

கூராகச் சொன்னால் 1970 ஆம் ஆண்டு முதல் வயவையூரில் பெண்கள் வீட்டிலிருந்தபடி உத்தியோகம் பார்த்தனர். அதாவது மேலைத்தேச நாடுகளில் இன்று அறிமுகம் ஆவதை வயவையூரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்தனர்.

அது மட்டும் அல்ல.. பெண்கள் வீட்டில் வைத்து சாம்பிராணிக் குச்சி சுத்திய போதும், கோடா போட்ட போதும், பட்டி ஒட்டிய போதும், வீட்டிலிருந்த மாணவர்களும் பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் சாம்பிராணிக்குச்சி சுத்தினர்; கோடாப் போட்டனர்; பட்டி ஒட்டினர். அவர்களும் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பளம் பெற்றனர். அதாவது வயவையூர் மாணவர்கள் 1985 ஆம் ஆண்டிலேயே பகுதி நேர வேலை செய்யத் தொடங்கி விட்டனர்.

எண்ணிப் பார்க்கிறேன். உலகுக்கு பலதை அறிமுகம் செய்து வைத்தவன் தமிழனென உறுதிப்படுத்தும் வண்ணம், உலக அரங்கில் இன்று அறிமுகமாகும் முன்னேற்றாகரமான பல மாற்றங்களை எங்கள் வயவையூர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திக்காட்டி இருக்கிறது.

பல்வகை நுட்பங்களைக் கொண்டு புதுமைப் பெண்களை உருவாக்கி உள்ளது. அவர்கள் மூலம் கைத்தொழில் புரட்சியை பூக்க வைத்திருக்கிறது. சிறுவயதினருக்கு விளையாட்டாக உழைப்பைக் கற்றுக்கொடுத்து, பொறுப்புள்ள நாளைய சமுதாயத்திற்கு அடித்தளம் அமைத்திருக்கிறது.

இன்று மீண்டும் எங்கள் வயவையூர் எங்கள் கைகளில் வரத் தொடங்கி விட்டது. அங்கே பழைய பொற்காலம் புதுப் பொலிவுடன் மலர வேண்டும். அதற்காக ஒருங்கிணைந்த கோட்டில், ஒத்த நோக்கில் அனைத்து வயவையூர் மக்களும் பயணிக்க வேண்டும்.

பயணிப்போம்.