திடீர்ப் பணக்காரனான ஒருவர், காணாததைக் கண்ட புழுகத்தில், பகட்டாக நடப்பதைச் சுட்டுவதற்காக “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்” எனும் பழமொழி பயன்படுத்தப்படுகிறது.
உழைப்பினால் உயர்ந்தவர்களும், அதிஷ்டத்தால் உயர்ந்தவர்களும் பணக்கார வர்க்கத்தில் அடங்குவர். இவர்களில் எவ்வகையினருக்கு இப்பழமொழி பொருந்தும்?
இப்பழமொழியின் கருவைத் தாங்கி நிற்கும் சொல் அற்பன் ஆகும். அற்பன் என்றால் இங்கே பொருத்தமில்லாதவன் எனப் பொருள்படும். எனவே, பொருத்தமில்லாதவனுக்கு உயர்வு கிடைத்தால் அவன் அதை பகட்டுக்குப் பயன்படுத்தி வீணடித்து விடுவான் என்கிறது இப்பழமொழி.
இதற்கான மிகச் சிறந்த உதாரணங்கள் அறிவியல் கண்டு பிடிப்புகள். எமது அன்றாட அத்தியாவசிய அறிவியல் கண்டு பிடிப்பான அலைபேசியை அற்பர்கள் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்? முகநூல் போன்ற சமூகத்தளங்களை அற்பர்கள் எதற்காகப் பயன்படுத்துகின்றனர்? இவற்றை ஆய்ந்தால் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியிலும் குடை பிடிப்பான்” பழமொழிக்கு அர்த்தம் புரியும்.
“எதை எவருக்குக் கொடுக்க வேண்டுமோ. அதை அவருக்குக் கொடுக்க வேண்டும்; பொருத்தமில்லாதவருக்கு கொடுக்கும் எதுவும் அநியாயமாகப் போகும்; இதனால் சமூகக் கேடுகளே நிகழும்.” இதையே இந்தப் பழமொழி எனக்கு வழங்கும் அறிவுரை ஆகும்.