முகத்திலறையும் முள்ளிவாய்க்கால் – 2

163

என் பால்ய நண்பன் அவன். ஏறத்தாழ 15 ஆண்டுகளின் அவனைச் பிரான்சில் சந்தித்தேன். வீரத்தின் அடையாளத்தை அவன் கண்ணருகில் கண்டேன். அவன் நடந்து வந்த பாதையை அவன் நடையழகில் கண்டேன்.

ஆம்.. காலைக் கொஞ்சம் நொண்டி நடக்கும் அவனுடைய கண்ணருகில் ரவைகள் உரசிய தழும்பி அப்பட்டமாகத் தெரிந்தது. அவனும் நானும் சந்திக்கும் போதெல்லாம் பலவற்றை அவனிடம் கேட்க வேண்டி இருந்தது. என்னிடம் சொல்ல பலவும் அவனிடம் இருந்தது.. என்ன காரணமோ தெரியவில்லை.. அவற்றைத் தவிர மற்ற எல்லாம் கதைத்தோம்..

வெயில்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் பருவ காலத்தில் பின் கழுத்தில் சுள்ளிடுகிறது என்றான். மருத்துவரிடம் சென்று வலிநிவாரணிகள் பெற்றுக்கொண்டான்.

கொஞ்சம் தணிந்த பின்கழுத்துவலி மீண்டும் வரும் போது கூடவே கால் வீக்கத்தையும் கொண்டு வந்தது. அவனுடைய ஆடுகால் தசையில் இருந்த பள்ளத்தைச் சுற்றி வீங்கி இருந்தது. மீண்டும் மருத்துவர்.. வலி நிவாரணி.. ஏனைய மருந்துகள்.. ஓரிரு நாட்கள் அமைதி.. பின் திரும்பவும் அதே வலிகள்.. வீக்கங்கள்..

இந்த முறை மெல்லிய வலியென அவன் சொன்னாலும் அதன் தீவிரத்தை என்னால் உணர முடிந்தது. அவனுக்கே தெரியாமல் சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் அவனை சோதிக்க நேரம் கேட்டுப் பெற்றேன். அவர் தந்த நேரம் நெருங்க நெருங்க அவனுக்கு பின் கழுத்தில் வலியும் கால் வீக்கமும் அதிகமானது.

ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டான். அரசாங்க அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போது  உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தேவையான இரத்த மாதிரிச் சோதனைகள், சிறுநீர்ச் சோதனைகள், நிணநீர்ச் சோதனைகள், நரம்பு மண்டல கூர் நோக்குகள் எல்லாம் செய்யப்பட்டன..

சோதனை அறிக்கைகள் யாவும் சிறப்பு மருத்துவர்களாலும் துறை சார் மருத்துவ வல்லுனர்களாலும் அலசப்பட்டன. காலை மாலை என ஊசிகள் குத்தப்பட்டன. “கஸ்டமாக இருக்காடா” எனக் கேட்டேன். 

என் கண்களை ஊடுறுவினான். இதுவரை சொல்லில் வெளிப்படுத்தாத அனைத்தையும் என்னுள் கடத்தினான். நானும் கச்சிதமாக மனதில் பற்றிக்கொண்டேன். ஆறுமாதம் கழித்து வரும்படி கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்.

ஆறுமாதத்திற்கு ஒரு முறை சென்று இரு நாட்கள் தங்கி ஊசி போட்டுக்கொள்கிறான் அவன். ஒரு ஊசிக்கு ஆகும் செலவே இலட்சத்தை தாண்டும் ரூபாய் மதிப்பில். அவனுக்கு அவை எல்லாம் இலவசம்.. தேசத்தில் உள்ள அவனைப் போன்றவர்களுக்கு….?