(நான்) கவிதை எழுதும் முறை

905

நான் கவிதை எழுதும் முறை…

சில கவிதைகள் நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும்..
சில கற்பனையின் அடிப்படையில் இருக்கும்..

நிஜ சம்பவங்கள் எழுதுவது என்றால் சுனாமி..

சுனாமி…

சுனாமியின் போது என்னென்ன நடந்தது என்பதை எண்ணிப்பார்த்துக்கொள்வேன்..

1. கடலோர மக்கள்.
2. காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள்
3. அங்கு விளையாடின சிறுவர்கள்
4. தெருவெங்கும் ஓடினது…

இப்படியான முக்கியமான கருப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்…

1. கடலோர மக்கள்..

இதை எப்படி கவிதை நடையில் அமைக்கலாம்..

கடலோர மக்கள் நம்பியது கடலை…

சரி!

கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது கடல்..

இன்றைக்கு என்ன செய்தது.. சுனாமி வந்து உறவுகளை பலர் இழந்திருக்கிறார்கள்..

கடலோர மக்களின் உயிரை பலிவாங்கியது..

ஒரு பகுதி கிடைத்துவிட்டது கவிதைக்கு..

கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது கடல்
கடலோர மக்களின் உயிரை பலிவாங்கியது..

இது படித்துப் பார்த்தால் கவிதை நடையில் இல்லை.. சரி.. கொஞ்சம் வார்த்தைகளை அலசுவோம்…

கடலோர மக்களுக்கு வாழ்வை அளித்தது, முதல் வரியில் எங்கெல்லாம் எதுகைகள் (எதுகை என்றால், அம்மா, சும்மா, கிரிக்கெட்டு, தற்கெட்டு, இப்படி அமையும் வார்த்தைகள்! கவிதைக்கு இதானே அழகு… டி,ஆர் இப்படி அமைப்பதில் கில்லாடி) அமையும் என்று பாருங்கள்..

கடலோர, உடலோர.. வாழ்வை, வால்வை.. அளித்தது, அழித்தது..

இந்த மூன்றில் அளித்தது, அழித்தது.. மிக பொருந்துகிறது…
முதலில் கடல் கொடுத்தது.. பின் எடுத்துக்கொண்டது என்று சொல்லாடல் அமைக்க அளித்தது, அழித்தது.. எனபதை பயன்படுத்திக்கொள்ளலாம்..

கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது;
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தது!

இதை இன்னும் மெருகூட்டி, காலங்களை சேர்த்துக்கொள்ளலாம்..

இதுவரை
கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது;
இன்று
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தது!

மிகப்பெரிய பத்தி ஆகிவிட்டது.. நான்கு அடி வரி இருந்தால் படிப்பவருக்கு புரிந்துகொள்ள இலகுவாயிருக்கும்.. ஆறடியிலும் அமைக்கலாம் தேவைப்பட்டால்…

இதுவரை
கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது;

இன்று
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தது!

இப்படி மூன்று மூன்றாய் பிரித்துக்கொள்ளலாம்..

இதை இன்னும் கொஞ்சம் வேறுவிதமாய் நீங்கள் கடலைப்பார்த்து கேட்பது போலவும் மாற்றிக்கொள்ளலாம்..

இதுவரை
கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தாய்;

இன்று
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தாயே!