கடந்த உரையாடல்களைப் போல் அல்லாமல் இம்முறை கொஞ்சம் வெளிப்படையாக உரையாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வயாவிளானின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் தொடங்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உரையாடிய ஒரு அமைப்பின் பொருளாளர் மனம் விட்டு உரையாடிய விடயங்கள் மேலெழும்ப, ஏற்பட்ட உணர்வின் பிரதிபலிப்பே இவ்வுரையாடல்..
வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்சானது 500654 உரூபாய்களை மீளெழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்புக்கு வழங்கி உள்ளதாக, அவ்வமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதே போல பல அமைப்புகள் நிதிப்பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்நிதிகளைச் சேகரிப்பது இலகுவான ஒன்றல்ல. சந்தா, அன்பளிப்புகள் ஊடாக எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான சேகரிப்புகளைச் செய்ய முடியும் என்ற கேள்விக்கான பதில் நேர்மறையாக இராது. வேறு செயற்றிட்டங்கள் ஊடாக நித் ஈட்டும் முயற்சிகள் முட்டுக்கட்டைகளைத் தாண்டி முன்னெடுக்கப்படுமா தெரியவில்லை? எல்லாவற்றையும் யோசித்தால் மனசை சூன்யம் கவ்விக் கொள்ளும்.
இவ்வாறான நிதிப்பங்களிப்புகள் வயாவிளானில் வசிக்கும் வயாவிளான் மக்களின் தொழில் முனைவுக்குப் பயன்படாமல், கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கல்விக்கு வழங்குவது முக உயரிய சிந்தனையின் வெளிப்பாடே. ஆனால் பிள்ளை ஒன்று தன் சொந்தக் காலில் நிற்கும் வரை வழங்கப்படுகின்ற உதவித் தொகையில் ஐந்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் சிறு தொழில் முனைவுகளை மேற்கொள்ளலாம் என்பது எதார்த்தம். ஆனாலும் அது நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஏன்?
குடும்பச் சுமையைச் சுமக்க மாடு வாங்கிக் கொடுத்தோம். இந்தப் பக்கம் வாங்கி அந்தப்பக்கம் வித்து விட்டு மாடு களவு போய் விட்டதாகச் சொன்னார்கள் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். அதே போல் கடை போட்டுக் கொடுத்தால் கடையை சரிவர நடத்தாமல் நட்டமாகி விட்டது என்றார்களாம். கஷ்டப்பட்டு சேகரித்த நிதி இப்படி வீணாகப் போவதை விட கல்விக்கு உதவி என்ற பாதையில் பயணிக்க முடிவு செய்திருக்கிறார்கள். – அதில் இருக்கும் சவால்களை சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையுடன்.
உதவும் கரங்களை உருவாக்கும் மனங்கள் உதவி பெறுவோர் மனங்களே! மேலே சொன்ன இரண்டு ஏற்றுகளும் உண்மை எனில் வெளிநாடுகளிலிருந்து நீளும் உதவும் கரங்களை வயாவிளான் இழக்க நேரிடும். இதனால் வயாவிளானின் மீள் எழுச்சி பாதிக்கும்.
எங்கள் ஊரில் உதவிகள் தேவைப்படுவோர் இன்னும் பலர். எங்கள் குறுகிய மனங்களால் வெளிநாட்டிலிருந்து நீளும் உதவும் கரங்கள் அறுக்கப்பட்டால் அவர்களுக்கு யார் உதவுவது.
இத்தகையோர் குறுகிய காலம் நேர்மையாக இருந்து பாருங்கள், உங்களதும் சுற்றி உள்ளோரதும் முன்னேற்ற வேகத்தை. அது மட்டும் அல்லாமல் செய்த உதவியைப் போட்டோ எடுத்துப் போட வேண்டிய தேவையும் சம்மந்தப்பட்டவர்களுக்கு இராது. அதனால் ஏற்படும் அவமானங்களும் ஆதங்கங்களும் இல்லாமல் போய்விடும்.
எனவே எங்கள் மனங்களில் இருக்கும் அழுக்குகளை இக்கணமே அகற்றுவோம். உதவும் கரங்களை உருவாக்குவது உதவி பெறும் மனங்களே என்பதை நெஞ்சில் நிலை நிறுத்துவோம். உதவும் கரங்களை உருவாக்கும் மனங்களாக புதிதாய்ப் பிறப்போம்.
உரையாடலாம்