முற்குறிப்பு:-
வயவன் இணையத்தின் நிர்வாகத்தில் எவ்வித வகிபாகமும் கொண்டிராதவர். மிகச்சிறந்த நிர்வாகிகள் ஒருவராகத் தன்னை நிரூபித்தவர். அவருடன் ஒரு நாள் பேசும் போது சொன்னார் “நிர்வாகம் என்றால் என்ன என்று எங்கள் அமைப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று. அதன் அங்கமாக வெளியானதே தோனியின் நிர்வாகவியல் தொடர். அதன் முடிவுரையே இது. “ஏதோ பிரச்சினை ஆக்கும்” என்று எந்தக் கற்பிதங்களும் வேண்டாம். இத்தொடரை எழுதியவர் சிஸ்கோ நிறுவனத்தின் வன்பொருள் பகுதியின் நிர்வாக இயக்குனர். தேவைப்பட்டால் இன்னும் எழுதித் தர தயாராக உள்ளார்.
இனி..,
நான் என்று கூட இருக்கலாம்.. நான் தான் என்று இருக்கவே கூடாது என்பார் எங்கள் ஐயா.
“நான் தலைவர்; நான் விரும்பினால்த்தான் உண்டு; இல்லாவிட்டால் இல்லை” என்ற எண்ணம் பொறுப்புக்குரிய தகைமை அல்ல.
“இதுதான் இலக்கு. இதற்கு வேண்டும் என்றால் உண்டு; இல்லை என்றால் இல்லை” என்பதே பொறுப்பின் தகைமை..
இங்கே பொறுப்பு என்று சொல்லக் காரணம், பொதுப்பணியில் பதவி என்ற பதம் இருக்கக் கூடாது என்பதாலேயே. பதவி எனும் பதம் என்பதை விட பதவி எனும் மதம் சாலப்பொருந்தும். மதம் பிடித்த யானையே பேரழிவைத் தரும்போது மதம் பிடித்த மனிதன் எத்தகைய அழிவுகளைத் தருவான்? நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு பதறும்.
எனவே பொதுப்பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் நாம் பதவி வகிக்கின்றோம் என எண்ணி மிதக்காமல் நான் பொறுப்பு வகிக்கிறேன் என உணர்ந்து நடந்து தகைவர்களாக இலக்கை எட்டுவோம்.
பொதுப்பணியில் தலைவனாக இருப்பது சிறப்பில்லை. பொதுப்பணிக்கு தகைவனாக இருப்பதுதான் சிறப்பு.
பேராளுமைத் தலைவனை பொறுப்புக்குரிய தகைவனாக கண்டு வளர்ந்த எங்களுக்கு இதை விட விளக்கம் தேவை இல்லை.
முடிவுக் குறிப்பு – தலைவனை எடுத்தாண்ட காரணம் தலைமைத்துவம் சரியாக இருந்தால் எல்லாமே சரியாகிவிடும் என்பதாலேயே.