கைத்தொழில் பேட்டையும் சுய உதவிக் குழுக்களும்

1459

பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து அதன் மூலம் சமூகவிருத்தி அடைந்து, அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக கியூபா திகழ்கிறது.  இது தொடர்பாக மேந்தன் பிள்ளை விரைவில் எழுதுவார். பொருளாதாரத் தன்னிறைவையும் சமூக விருத்தியையும் ஒருங்கே முன்னெடுத்து வெற்றி கண்ட தேசமாக தமிழீழம் புகழோச்சியது. இதை பிறிதொரு சமயம் பேசு பொருள் ஆக்கலாம். அத்தகைய ஒரு வளர்ச்சிக்குள் வயாவிளானும் வர வேண்டும் என்ற வயவை நலன் விரும்பி ஒருவரின் ஆசை இட்ட வித்தில் முளைத்ததே இவ்வுரையாடல். இது பெரு விருட்சம் ஆகுமா? முளையிலேயே கருகுமா? முடிவு மக்கள் மனங்களில்..

இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்தி சபை.. 1970 களில் ஆக்கம் பெற்ற இச்சபையானது கைத்தொழில் முனைவோராக விரும்புவோருக்கு, கைத்தொழிலை எப்படித் தொடங்குவது, எப்படி மேலாண்மை செய்வது, எப்படி விருத்தி செய்வது போன்ற அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதோடு கைத்தொழில் தொடர்பான நுட்பங்களை புகட்டுகிறது. கைத்தொழிற் தொழில்நுட்பத் தகவல்களை வழங்குகிறது.

கைத்தொழில் முனைவோரின் முயற்சியை உள்வாங்கி, மேலதிக ஆலோசனைகளை வழங்கி, உத்தேச பட்ஜெட்டை புகுத்தி, நிதி நிறுவனங்கள் நம்பிக் கடன் கொடுக்கும் விதத்தித்தில் திட்ட வரைபை உருவாக்கிக் கொடுக்கிறது. வங்கிகளில் கடன் பெற பின் நின்று உதவுகிறது. பெற்ற கடனில் கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் உபகரணங்களையும், இன்ன பிறவையும் மலிவு விலையில் பெற்றுக் கொடுக்கிறது. அத்தோடு சூழற்பாதுகாப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவைப்படும் சான்றிதழ்களைப் பெற உதவுகிறது. அத்துடன் நின்று விடாமல் கைத்தொழில் நிறுவனம் தொடங்க இலவசக் காணிகளை (இலவசத்துக்கு இணையான அதாவது மீளப்பெறக் கூடிய கட்டணம் செலுத்திய காணிகளை) கைத்தொழில் பேட்டைகள் மூலம் வழங்க ஆவன செய்கிறது.

வழங்கப்பட்ட காணியில், வங்கிக்கடன் உதவியுடன் நிறுவப்பட்ட கைத்தொழில் நிறுவனத்துக்குத் தேவையான மனிதவளத்தைப் பெற்றுக் கொடுக்கிறது. தொழில் முனைவோன் நியமிக்கும் கைத்திழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குகிறது (குறிப்பிட்ட சில கைத்தொழிலுக்கு மட்டும்.

உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொடுக்கிறது. சந்தைப்படுத்துனர் சந்திப்புகளை நடத்துகின்றது. நியாவிலையில் விற்க உதவும் அதே வேளை தொழில் முனைவோருக்கு வியாபார விருத்தி நுட்பங்களை பயிற்றுவிக்கிறது.

கைத்தொழில் முனைவோரோடு நின்று விடாது, கைத்தொழில் செய்ய விரும்புவோருக்கும் உதவுகிறது. ஜாம், பழரசம், எண்ணெய், பப்படம், யோக்கட், மின்கல நீர், மின்கல அமிலம், சுவர்ப்பூச்சு, கூரை ஓடு, நிலஓடு, சுவர் ஓடு, கயிறு, தும்புத்தடி, பாதணி உற்பத்தி உத்திகளையும், உற்பத்தித் தொழில்நுட்பங்களையும், உற்பத்தி உபகரணத்தை கையாளும் நுட்பத்தையும் கைத்தொழிலாளிகளுக்குப் பயிற்றுவித்துப் பயிற்சியும் அளிக்கிறது.

கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் உறுதுணையோடு தொழில்முனைவோனாக வெற்றி கண்ட ஒரு சிங்கள நண்பன் மூலமும், வித்திட்ட வயவை நலன் விரும்பி மூலமும் உறுதிப்படுத்தப்பட்டவையே மேற்சொன்ன தகவல்கள்.

எங்கள் மாவட்டத்தில், எங்கள் ஊருக்கு நெருக்கத்தில், அச்சுவேலிக் கைத்தொழில்பேட்டை உண்டு. போர்க்காலத்தில் உறங்கிய அச்சுவேலிக் கைத்தொழில் பேட்டை இன்று இயங்குகிறது, ஆனாலும், தொழில் முனைவோர் நாட்டம் இன்மையால் இயந்திர கதி அங்கே இல்லை. வெறும் காணி நிலங்களே அதிகம் உண்டாம்.

அவ்வெறும் காணிகளில் எங்கள் ஊரின் கைத்தொழில் நிலையம் அமைந்தால்.. எங்கள் ஊரில் இருந்து தொழில் முனைவோர் தோன்றினால்… எங்கள் ஊரில் வேலை இல்லாத் திண்டாட்டம் வறுமை நிலை அடைந்து விடும். மக்களின் வறுமை நிலை மறைந்து விடும். பொருத்தமானோர் முன்னின்று வழிகாட்டினால் அனைத்தும் நடந்து விடும்.

அடுத்த வாரம் சுய உதவிக் குழுக்களோடு உரையாடுவோம்.