ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அண்ணன் ஒருவரை அடிக்கடி சந்திப்பேன். நான் பணிக்குப் போகும் வழித்தடத்தில் அவரும் பயணிப்பார். இன்னும் நெருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு வியாழனும் காலையும் மாலையும் நாங்கள் சந்தித்தோம்.
சந்தி என்றாலே “கதைகள்” பேசுவதும் இயற்கை. எங்கள் வழித்தடங்களில் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட போது எங்கள் உரையாடல்கள் “கதைகள்” பல பேசின.
அவருடைய கதைகள் பேசியதிலிருந்து ஒவ்வொரு வியாழனும் கூழ்மப்பிரிப்புச் (dialysis) சிகிச்சைக்காக செல்வதை அறிய முடிந்தது. சிறு நீரகச் செயலிழப்பு நிலை 5 இல் உள்ளவர்களுக்கு, சிறு நீரகம் மாற்றும் வரை “தாக்குப்பிடிக்க” மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை கூழ்மப்பிரிப்பு.
அந்நிலையை அவர் அடைய காரணம் என்னவாக இருக்குமெனும் அக்கறை பிறந்தது. நாட்டில், கடைசிக் கட்டத்தில் பல நாட்கள் தண்ணீர் குடியாது இருந்ததால் இந்நிலை தனக்கு வந்தது என்றார்.
தண்ணீர் குடிப்பம் எண்டால் கிணறெல்லாம் குண்டு போட்டு மூடப்பட்டிருக்கும். கிடைக்கிற சேத்துத் தண்ணியைக் குடிப்பம் எண்டால் அதில எங்கட சனத்தின்ர சதையும் ரத்தமும் மிதக்கும். எப்பிடிக் குடிக்க மனம் வரும் என்றார்.
தப்பித் தவறிக் சொட்டு நல்ல தண்ணீர் கிடைத்தாலும் அது இன்னொரு உயிரைக் காக்கும் என்பதால் அதை விட்டுக் கொடுக்க வேண்டி வந்ததையும் பரிமாறினார்.
அவர் சொல்லச் சொல்ல, “நான்காம் உலகப் போர் குடி தண்ணீருக்காகத்தான் நடக்கும்; குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று வாழும் சூழல் உருவாகி உலகம் அழியும்” போன்ற சித்தாந்தங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.
இவரைப் போல், கூழ்மப்பிரிப்பு தேவைப்படும், சிறுநீரக மாற்று அவசியமான ஆயிரம் சொந்தங்கள் எங்களுடன் நிச்சயம் இருப்பார்கள்.
ஊரிலிருக்கும் எம் அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, அக்காவுக்கோ, வேறு உறவுகளுக்கோ அருகில் அவர்கள் வசிப்பார்கள். தங்கள் நிலையை மனம் விட்டுச் சொல்ல முடியாமல் அவர்களும் வாழக்கூடும் எம்மிடையே….
இவ்விடத்தில் இன்னோரு விடயத்தைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தாயகத்தில் கூழ்மப் பிரிப்புக்கான உபகரணங்கள் இருக்கவில்லை.
கூழ்மப் பிரிப்பு செய்ய வேண்டியவர் நோயாளி காவு வண்டிகள் மூலம் வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கே அவர்களுடைய இரத்த, சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படும். அங்கிருந்து சோதனை முடிவுகள் வர நான்கு நாட்கள் வரை ஆகும்.
அதற்குள் கூழ்மப் பிரிப்பு செய்ய வேண்டும். இல்லை எனில் தாக்குப்பிடிக்க முடியாமல் சாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே சோதனை முடிவுகள் இன்றியே கூழ்மப்பிரிப்புச் செய்யப்படும்.
பல நேரங்களில் நோயாளி காவுந்துகளை வவுனியாவுக்குள் நுழைய விடாமல் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசிக்கும் நெஞ்சங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
அன்றைய அந்நிலை அறிந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை மையமாகக் கொண்டியங்கிய மருத்துவக் குலாம் ஒன்று தாயகத்தின் தேவைக்கென கூழ்மப்பிரிப்பு உபகரணத்தை கடும் இடையூறுகளைச் சந்தித்த பின் வழங்கி இருந்தது.
அவ்வுபகரணம் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் பொருத்தப்பட்டு மக்களுக்கு பேரிதவி புரிந்தது.
அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் பெரிதான வேறுபாடில்லை. தாய்ப்புலத்தில் தவித்தபடிதான் உள்ளார்கள் உறவுகள். வாழ்புலத்தில் நாங்கள் மட்டுமென்ன மாறியா விடப் போகின்றோம்?