நாகணவாய்ப் புள் (மைனா)

1500

படமும் பதிவும் – ரவீ

மைனா என்றே நாம் சொல்லிப் பழக்கப்பட்ட இந்த பறவையின் அழகு தமிழ் பெயர் நாகணவாய் புள். புள் என்றால் தமிழில் பறவை என்று அர்த்தம்.

ஆயிரம்தான் ரவுடித்தனம் பண்ணாலும் உள்ளுக்குள்ளே உதறல் எடுக்கும் பயம் இருக்கும் இந்த பயபுள்ளைக்கு. அத்தனை சீக்கிரம் தண்ணீர் குடிக்க இறங்கமாட்டான். என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனமா பார்த்து களம் இறங்குவான்.

ஒருவன் தண்ணீர் குடிக்கும் போது மற்றவன் EB வயரில் அமர்ந்து எச்சரிக்கை சத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பான். இரண்டு மாதங்களுக்கு முன் எப்போதும் ஒரு பூனை என் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தது. அதனால்தானோ என்னவோ இந்த பய உணர்வு.

சொல்லப்போனால் இப்போது காகத்திற்கு அடுத்தபடியாக நொறுக்குத் தீனிகளை தேடி தேடி தின்பவன் இவனாகத்தான் இருக்கும். பார்க்கும் பல பொது இடங்களில் மிக்சர், காராசேவு, பொரித்த சோளத்திற்கு இவன் பண்ணும் அடிதடிகளை சொல்லி முடியாது.

இந்தியாவில் காகங்களை விட அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் வாழும் பறவை இதுதான். சூழ்நிலை சரியாக அமைந்து விட்டால் இரண்டே வருடங்களில் இவைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்தவே முடியாது.

கிடைக்கும் பொந்துகளில் எல்லாம் கூடமைத்து குடி கொண்டு விடுவார்கள். இவனை பற்றி சரியாக தெரியாமல் கையை சுட்டுக் கொண்ட தேசம் ஆஸ்திரேலியா.

பூச்சிகளின் தாக்குதலை கட்டுப் படுத்த நினைத்து இவனை இந்தியாவில் இருந்து அந்த தேசத்தில் அறிமுகப் படுத்த இவனின் அசுர பசிக்கும், இனப்பெருக்கத்திற்கும் வரையறை இல்லாமல் போக அந்நாட்டு உயிரினங்கள் பாதிப்பு அடைய துவங்கின. எனவே இவற்றை ஆஸ்திரேலிய அரசு, அழிவு செய்யும் உயிரினமாக அறிவித்து விட்டார்கள்.