முன்னொரு காலத்தில் மகிழ்மதி எனும் நாடு இருந்தது. ஒருவன் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மன்னனாக முடியும்; அதன் பின் அவன் அருகிலுள்ள்ள காட்டுக்குப் போய்விட வேண்டும் என்ற சாசனம் அந்நாட்டில் இருந்தது. காட்டுக்குப் போவதற்கு அஞ்சி எவரும் அரசனாக முன்வரவில்லை. இதனால் மகிழ்மதி மன்னன் இன்றி இருந்தது.
மன்னன் இல்லாததால் நிர்வாகச் சீர்கேடுகள் மலிவுற்றிருந்தன. மக்கள் பல இன்னல்களை சந்தித்தனர். மன்னன் ஒருவன் வர மாட்டானா.. நல்லாட்சி நாட்டில் மலராதா.. என மக்கள் ஏங்கினர். அப்போது அந்நாட்டுக்கு மகிழன் வந்தான்.
அவன் நாட்டி நடப்பை அறிந்து கொண்டான். எவ்வித தயக்கமும் இன்றி அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். நிர்வாகங்களை சீரமைத்தான். மக்கள் குறைகளை களைந்தான். நல்லாட்சியை நல்கினான். மக்கள் மகிழ்ச்சியில் திளைத்த வேளையில் ஐந்தாண்டுகள் கடந்தன. மகிழ மன்னன் அரசைத் துறந்து காடேகத் தயாரானான்.
மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். தேர் காட்டை நோக்கி நகர்ந்தது. மகிழனோ மகிழ்வுடன் காணப்பட்டான். தேரோட்டி வியப்புடன் “கொடுங்காட்டுக்குப் போவதில் உங்களுக்கு கவலை இல்லையா” என வினவினான். மகிழன் புன்முறுவலுடன் கூறத் தொடங்கினான்.
நான் மகிழ்மதிக்கு மன்னனானதும் காட்டுக்குள் பல வேடர்களை அனுப்பினேன். அவர்கள் கொடிய விலங்குகளை விரட்டினர். அங்கேயே அவர்கள் தங்கினர். பின் விவசாயிகளை அனுப்பினேன். அவர்கள் காட்டை வெட்டி கழனி ஆக்கினார்கள். அவர்களும் அங்கே தங்கினர். பின்னர் கட்டடக்கலை வல்லுனர்களை அனுப்பினேன். அவர்கள் ஆலைகள், சாலைகள், வீடுகள், அரண்மனைகள் எனக் கட்டி அழகிய நாட்டை நிர்மாணித்தனர். அவர்களும் அங்கே வாழ்கின்றனர். பின் கல்வியாளர்களை அங்கே அனுப்பினேன். அவர்கள் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கி அங்கே வாழ்கின்றனர். அந்த நாட்டுக்குத்தான் இப்போது நான் செல்கிறேன்..
அந்நாட்டுக்கு நான் மன்னன். அந்நாட்டை பெரு நாடாக்கி மக்களை மகிழ்வோடு வாழ வைப்பதே என் இலக்கு என மன்னன் சொன்னதைக் கேட்டதும் தேரோட்டி திகைத்தான். புத்தியின் பலத்தை அறிந்தான்.