உங்கள் சிந்தனைக்கு..

ஒரு முறை மதன் மோகன் மாளவியா அவர்கள் காசிப் பல்கலைக் கழகத்துக்காக நிதி சேகரிக்க கொல்கத்தாவில் ஒரு பணக்காரரின் வீட்டுக்குச் சென்றார். அங்கே அவருடைய மகள் நெருப்புப் பெட்டியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் ஒரு நெருப்புக் குச்சியை வீணாக எரியவிட்டதைக் கண்ட அந்தப் பணக்காரருக்குக் கோவம் வந்தது. மகளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அடித்தார். அந்தப் பணக்காரரின் கருமித்தனம் இதனால் வெளிப்பட்டதால், மாளவியா அவரிடம் எதுவும் கேட்காமல் வெளியேறினார்.

தற்செயலாக இதனை அவதானித்த பணக்காரர், உடனடியாக மாளவியாவிடம் வந்து, அவர் வந்த காரணத்தை வினவினார். மாளவியாவும் தான் வந்த நோக்கத்தைச் சொன்னார். உடனே மாளவியாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற பணக்காரர் ரூபாய் ஐம்பதினாயிரத்துக்கான காசோலையை மாளவியாவிடம் கொடுத்தார். இதனால் வியப்படைந்த மாளவியா தீக்குச்சி நிகழ்வைப் பற்றி வினவினார்.

அதற்கு அப்பணக்காரர் “தக்க சமயத்தில் தாம் தாராள குணம் அழகைக் கொடுக்கும். ஆனால் அடக்கமான வாழ்வோ எப்போதும் அழகைத் தரும். ஒரு நெருப்புக் குச்சியை அவள் வீணாக்கினாள். அக்குச்சியின் மதிப்பை அவள் அறியவில்லை. எனில் எப்படி அவளால் நான் உழைத்து ஈட்டிய சொத்தை மதிப்பாள்” என்றார்.