கவிதை எழுதுவது எப்படி – 4 (படித்ததில் பிடித்தது)

741

வார்த்தை :

கவிதைகளில் வார்த்தைகள் மிக முக்கியம். ஒரு கவிதையின் பலம் இவைகள். அதை சரியான முறையில் அடுக்கி அல்லது சரியான இடத்தில் சரியான வார்த்தை உபயோகித்து பழகவேண்டும்.. அதோடு எளிமையாகவும் எல்லாருக்கும் தெரியும் வலிய வார்த்தைகள் உபயோகிக்க வேண்டும்/

உதாரணத்திற்கு :

தூக்கம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு சொல். சாதாரண வடிவம் இதையே வலிமையாக்குவது எப்படி?

தூக்கம் – எளிய சொல்
உறக்கம் – இதுவும்கூட
நித்திரை – ” “

ஆழ்ந்த உறக்கம் – கொஞ்சம் வலியது
கடும் நித்திரை – கொஞ்சம் வலியது

இம்மாதிரி.. அதேபோல ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும். பல வார்த்தைகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். உதாரணத்திற்கு

கோடி – பண எண்ணிக்கை, முனை, அல்லது மூலை

திரை – திரைச்சீலை, அலை (திரைகடல் ஓடியும்)

இன்னொன்று பாருங்கள். இவை பல பொருள் கொடுக்கக் கூடியவை

ஒற்று – தூது
ஒற்று – உளவு
ஒற்று – ஒற்றெழுத்துக்கள்
ஒற்று – ஒற்றியெடுக்கும்படி கட்டளை இடுதல்

இன்னும் சில பிரித்தால் பல பொருள் கொடுக்கக் கூடியவை./. இம்மாதிரி வார்த்தைகள் வைத்து எழுதும்போது கொஞ்சம் புரிவதில் சிரமம் இருக்க நேரிடும்,.

என்றாவது – என்றைக்கு, என்று ஆடு வருவது, என்று ஆவது, 
தாயகம் – தாயின் உள்ளம், தாய்நாடு, 
தாமரைச்செல்வன் – மான் போலத் தாவிச் செல்பவன், தம்மை குறையென்று நினைத்துச் செல்பவன், தாமரையின் செல்வன், இம்மாதிரி பல

இம்மாதிரி பல வார்த்தைகள் தெரிந்துகொள்வதோடு கொஞ்சம் கடினமான வார்த்தைகளான :

அந்தரம் – வானம்,
குருதி – ரத்தம்
அதரம் – உதடு,
உதிரம் – ரத்தம்
உதரம் – வயிறு,
தொ(து)ளை – ஓட்டை போடு (துளையிடு)
திரி – அலை (அலைந்து திரி), விளக்குத் திரி
மேவு – பரவு அல்லது பரவல்
புடை – அடித்தல் (அடி)
களி – விளையாடு பார் 

போன்றவைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்

காதல் கவிதைகளில் நான் அதிகம் இம்மாதிரி வார்த்தைகள் கண்டதில்லை இத்தனைக்கும் இவையாவும் நமக்குத் தெரிந்த வார்த்தைகள் தான். புதுமைக் கவிஞன் பாரதியின் பாடல்கள் படித்தாலே போதுமே இந்த வார்த்தைகள் தானாய் வாயில் வரும்.

மேற்சொன்ன வார்த்தைகள் சில… இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் உண்டு. இவற்றை நிச்சயம் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை.. ஆனால் தொடர்ந்து இரண்டாம் வரி வார்த்தைகளே பயன்படுத்துவதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் அல்லவா? தமிழில் வார்த்தைகள் தெரியாவிடில் சட்டெனவோ அல்லது அழகாகவோ நல்ல கவிதை எழுதமுடியாது. சொற்களஞ்சியம் நம்முள் வரவேண்டும். இதற்காக தமிழ் அகராதி தேடவேண்டிய அவசியமில்லை. இம்மாதிரி கடின வார்த்தைகளோடு கவிபாடும் சிலரின் கவிதைகளைக் கேட்டு அது என்ன வார்த்தை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். என்னால் முடிந்தவரை உதவமுடியும். அல்லது பாரதி, பாரதிதாசன், போன்றவர்கள் மற்றும் மரபுக் கவிதை எழுதுபவர்கள் அல்லது கடினவார்த்தையில் வலுவான கருத்து சொல்லும் கவிஞர்கள் புத்தகங்களைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

இவற்றால் நமக்கு பல பயன்கள் உண்டு..

  • வெகு சீக்கிரத்தில் ஒரு கவிதை பாடலாம்
  • அழகான வார்த்தை அமைப்பில் கவிதை உண்டாக்கலாம்
  • கவிதை விளையாட்டுக்கள் அரங்கேற்றலாம்
  • சொல் விளையாட்டுக்கள் ஏற்படுத்தலாம்
  • புதுமையாக எதுவும் செய்யலாம்.

வார்த்தைக் களஞ்சியமில்லையேல் எடுபடாமல் போகும் கவிதைகள் ஏராளம். ஆனால் புதுமைக் கவிகளில் எளிமை புகுத்தவும் தவறக்கூடாது. சரி ஒரு கேள்வி எழலாம்.. மேற்சொன்ன வார்த்தைகள் சாதாரண பாமர மக்களுக்குத் தெரியவாய்ப்பில்லையே என்று,
நாம் எழுதும் கவிதைகளை ஒருவேளை புத்தகமாய் வெளியிடும் பட்சத்தில் இந்த பாமர மக்களா வாங்குவார்கள் ? இல்லை.. தொண்ணூறு சதம் கவிதை எழுதுபவர்களும் மிக மிக கவிதை விரும்பிகளும்தான்.. சினிமா புத்தகங்கள் வாங்கும் நம் நாட்டில் கவிதை புத்தகங்கள் தோற்றுவிடுகின்றன. அதனால் பயப்படாமல் எழுதலாம். அடுத்தவருக்குப் புரியவேண்டும் என்பதில் கவனம் கொண்டு கருத்தை சுமாராகச் சொல்லக் கூடாது,. அது மிக முக்கியம். கவிச்சமர் போன்றவற்றில் பங்கேற்று சிறப்பாக போரிடவேண்டுமென்றால் நிச்சயம் வார்த்தைகள் அதிகம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். பழகு தமிழ் மிக எளிது என்பதாலும் பழைய வார்த்தைகள் பல இன்னும் உயிரோடு இருப்பதாலும் எளிதில் நாம் கற்றுக் கொள்ளலாம். தமிழுக்கு வசதியே அதுதான்.

இனி அடுத்து எதுகை மோனைகள் போன்ற இலக்கணங்களை புதுக்கவிதையில் எப்படி புகுத்தலாம் என்று பார்க்கலாம்.