திருத்தி எழுதியவர் – அறிவியல் மைல்கல் – 14

223

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
(1473 – 1543)

கிமு 90ஆம் ஆண்டில் பிறந்த டாலமி , பூமியைச் சுற்றியே
மற்ற கிரகங்களும் , ஏன் சூரியன் கூட சுற்றிவருவதாக நம்பினார்.
அவரின் கோட்பாட்டை அனைவரும் நம்பினார்கள்.
பூமியே பிரதானம் என நம்ப விரும்பினர் மக்கள்.
அந்த நம்பிக்கைக்குத் தீனி போட்டது டாலமியின் கொள்கை.
வெற்றிக்குக் கேட்பானேன்?

பல கோளாறுகள், சந்தேகங்கள் சிலரால் எழுப்பப்பட்டாலும்
பெரும்பான்மையோர் நம்ப விரும்பிய ‘ பூமியைச் சுற்றும் அண்டம்’
கொள்கை அடுத்து 1500 ஆண்டுகளுக்கு கோலோச்சியது.

அறிவை ‘நம்பிக்கைகள்’ ‘சொந்த விருப்பங்கள்’
‘நாமே பிரதானம் ‘ என்ற ஈகோ – இவை மூழ்கடித்துவிடும்
என்பதற்கு டாலமியின் வெற்றி (தப்பு) கொள்கையே நல்ல உதாரணம்.

வலிமையானவர் சொன்ன ‘பொய்மை ‘ பல நூற்றாண்டுகளுக்கு
உலக மக்களையும், விஞ்ஞானிகளையும் மயக்கி வைத்திருக்கும்
என்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.

வெற்றுப்பலகையில் எதையும் புதிதாய் எழுதிவிட முடியும்.
ஆனால், உலகம் மதித்து நம்பிக்கொண்டிருக்கக்கூடிய
பெரும் வெற்றி (தப்பு) கொள்கைகள் பொறிக்கப்பட்ட அறிவியல் சுவற்றில்
அதை அழித்து, திருத்தி – சரியாய் மாற்றி எழுதி
ம(�)க்கள் கூட்டத்தை நம்பவும் வைக்கவேண்டும்.

இது என்ன சுலபமான காரியமா?
இதையும் செய்துகாட்டிய மாபெரும் சாதனையாளர் நம் கோபர்னிக்கஸ்.
(நாம் செல்லமாய் கோபர் என அழைக்கலாமா?)

கோபர் போலந்தில் பிறந்தார்;
இத்தாலியில் மருத்துவம், சட்டம் படிக்கச் சென்றார்.
சென்ற இடத்தில் வானியலில் ஆர்வம்.
அப்போது டாலமி சொன்ன ‘பூமியைச் சுற்றி’ – கோட்பாட்டை ஆராய்ந்தார்.
பல ஓட்டைகளைக் கண்டார்.குழம்பினார். டாலமி சொல்லிச்சென்றது தவறு
என்று மட்டும் உணர முடிந்தது. ஆனால் சரியான வானியல் அமைப்பு என்ன
என கோபருக்கு அப்போது தட்டுப்படவில்லை.

1503-ல் படிப்பு முடிந்து போலந்து திரும்பி மாமாவுக்கு உதவியாக
தொழில் புரியலானார். ஆனாலும் வானில் சுற்றும் மாயக்கிரகங்களின் மேல்
உள்ள மையல் குறையவில்லை. ஓய்வெல்லாம் அதைச் சுற்றியே எண்ணம்- ஆய்வு.

டாலமி வரைந்த தப்பான அறிவியல் ஓவியத்தை
அறிவுத் தூரிகை கொண்டு ஒரே ‘அடியில்’ வீழ்த்தினார்.
மத்தியில் இருந்த பூமியின் தப்பான முக்கியத்துவத்தை மாற்றினார்.
அந்த இடத்தில் சூரியனைப் பொருத்தினார்.

அட, எல்லாக் குளறுபடிகளும் ஒரே மாற்றத்தால் தீர்ந்தன.
நிலா தனிக்கிரகமல்ல… பூமிக்கு துணையாய் பவ்யமாய் அதனிடத்தில் பொருந்தியது.
மாத, வருடக் கணக்கு எல்லாம் இப்போது அறிவாய்தலுக்குக் கட்டுப்பட்டன.

கோபர் கிரகங்களை இரு அணிகளாய்ப் பிரித்தார்:
1) பூமிக்கு உள்சுற்றாய் உள்ள அணி
2) பூமிக்கு வெளிச்சுற்றாய் உள்ள அணி.
எந்த கிரகம் எங்கு என சூரியனிலிருந்து உரிய இடத்தைக் கொடுத்தார்.
கச்சிதமாய் எல்லாம் சரியாய் அமைந்தது.
பலநூற்றாண்டு மூடு(ட)பனி விலகியது.
சூரியனுக்கு உரிய சிம்மாசனம் மீண்டும் கிடைத்தது.
இப்போது செவ்வாய், சனி, ஜூபீட்டர் போன்றவை
ஏன் ‘ரிவர்ஸ்’ பயணம்போல் நமக்கு தெரிகிறது என்பதும்
இப்போது கோபர் தந்த புதிய வான்குடும்ப ஓவியத்தால் விளங்கியது.

ஆண்டாண்டுகள் ஆழப்பதிந்திருந்த தவறான கொள்கைகளை
வேரோடு பிடுங்கி எறிந்து, அஞ்சாமல் புதிய அறிவுவிருட்சம் நட்ட
நிக்கோலஸ் கோபர்நிக்கஸை இந்த மைல்கல்லின் நாயகனாய்
சித்தரித்தது மெத்தப் பொருத்தம்தானே நண்பர்களே

 

-இளசு