அதுவரைக்கும் அவர் வெறும் டிம் பெர்னர்ஸ் லீதான். 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தவரோ அல்லது மனிதக்குலத்தின் மகத்தான ஒரு முன்னேற்றத்துக்கு வித்திட்ட மனிதரெல்லாம் இல்லை.
ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஓர் ஆலோசகர் மட்டுமே. அவரின் பணி அணுசக்தி விஞ்ஞானிகள் தங்கள் தகவல்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு நெட்வொர்க்கை உருவாக்குவது மட்டுமே. இந்தப் பணியை அமெரிக்கா ஐரோப்பியர்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டிருந்தது. அதேபோல ஒன்றை விஞ்ஞானிகளுக்காக உருவாக்குவதுதான் அப்போது டிம்மின் வேலை.
ஒருநாள் அதைச் செய்துமுடித்துவிட்டார். இப்போது, ஒருவரின் கணினியிலிருந்து இன்னொருவரின் கணினிக்குத் தகவல்களை அனுப்ப விஞ்ஞானிகளால் முடிந்தது. இதற்குப் பின்னர்தான் டிம்முக்கு இன்னொரு யோசனை வந்தது.
இந்த நெட்வொர்க் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் தகவல்களை அனுப்பமுடியும். இதை ஏன் விஞ்ஞானிகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், அனைத்து மக்களும் பயன்படுத்தலாம்தானே, உடனே முடிவெடுக்கிறார். இந்த நெட்வொர்க்கை உலகம் முழுவதும் பயன்படுத்துவதற்கான கோடிங்கை ஓப்பன் சோர்ஸாக விடுகிறார்.
யார் வேண்டுமேனாலும் இதைப் பயன்படுத்தலாம்; எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம்; இப்படி டிம் முதலில் விட்ட World Wide Web-தான் இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இன்டர்நெட்டின் அடிப்படை. இதனை எல்லா மக்களும் பயன்படுத்தலாம் என அவர் எடுத்த முடிவுதான் அவரை உலகம் முழுவதும் கொண்டாடக் காரணம்.
அதன்பின் இணையத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டன. இணையம் சார்ந்து எத்தனையோ வசதிகள், சேவைகள் வந்துவிட்டன. இந்நேரம் டிம் என்ன செய்திருக்க வேண்டும்.
இதுவரைக்கும் சம்பாதித்த பணத்தை எதிலேனும் முதலீடு செய்துவிட்டு எங்கேனும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கவேண்டும்; அல்லது சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதை மட்டும் செவ்வனே நடத்திக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், மீண்டும் இன்டர்நெட் முழுவதையும் மாற்றப்போகிறேன் என வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார் டிம்.
1980-களில் எப்படி முதன்முதலில் இணையத்தை உருவாக்கியபோது ஓடிஓடி உழைத்தாரோ, அதேபோல இணையத்தை மீண்டும் பெருநிறுவனங்களிடமிருந்து பிரித்து மக்களிடமே கொண்டுசெல்வேன் என நாடு நாடாகப் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.
இன்றைக்கு இன்டர்நெட்டை ஆண்டுகொண்டிருக்கும் கூகுள், ஃபேஸ்புக், அமேசான் எல்லாமே இணையத்துக்கு எதிரிகள் என்கிறார்.
யாருக்காக இந்த யுத்தம்?
-தொடரும்-
-விகடன் இணையத்திலிருந்து-