சிறு தோடை விதைகள்

573

பண்டைப் பிரெஞ்சியர் நத்தார் நாளை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுப்பொருளாக (Cadeaux Noël) சிறு தோடை ஒன்றை வழங்கினார்களாம்.

பிரெஞ்சு வரலாற்றின் வறுமை முகமாக இதனை அடையாளப்படுத்தினாலும் ஒரு நன்னாளில், பிறக்கும் புத்தாண்டில் வாழ்வியல் நெறியை ஊட்டும் குறியீடாகவே இதனை நான் காண்கிறேன்.

குளிர்கால வாசல் திறக்கப்பட்டு விட்டது. வரண்ட இருமல் வாசல் வந்து விட்டது. அதற்கு முன்னரே சிறு தோடை வீட்டின் பழக்கூடையில் வந்தமர்ந்து விட்டது. கூடவே திராட்சைப் பழங்களும். வரண்ட இருமலுக்கு விட்டமின் சி நிறைந்த இந்தப் பழங்களை விட வேறு பொருத்தமான மருந்து இருக்காது. 

நோயாகவும் அந்நோய்க்கு மருந்தாகவும் இருப்பதால்தான் என்னவோ நம் முன்னோர் இயற்கையில் இறைவனைக் கண்டார்கள் போலும். அதை சற்றே விட்டு விலகி சிறு தோடையை எடுத்துச் சுவைக்கலாம்.

அங்காடிகளில் வழக்கமாகக் கிடைக்கும் பழம்தானே என எண்ணம் எழலாம். உண்மைதான்.. நேற்றுக் கிடைத்த சிறுதோடை, இன்றும் கிடைக்கிறது. நாளையும் கிடைக்கும்.

நேற்றுக்கிடைத்தது வியாபாரப் பண்டம். இன்று கிடைப்பதோ மருத்துவ முத்தம். இயற்கை எனும் இளைய கன்னி எனக்களித்த முத்தம். ஆம்.. குளிர் காலத்தில் மட்டுமே சிறு தோடை இயற்கையின் சுகப்பிரசவமாகக் கிடைக்கும். மற்ற நேரங்களில் கிடைப்பது வியாபாரிகளினால் வலிந்த்து பிறப்பிக்கப்பட்ட சிறு தோடை.

இதே போலவே வெக்கையை காலத்தில் மட்டும் சில கனிகள் தாராளமாக விளையும். சூட்டைத் தணிக்க வெக்கை நோயைத் தடுக்கத் தேவையான ஊட்டம் நிறைந்த கனிகளவை. அவற்றை உண்பவர்களுக்கு வேனிற்பிணிகள் பீடிப்பதில்லை.

இதனால் எமக்கு உணர்த்தப்படுவது, எந்தக் காலத்தில் எமக்கு என்ன தேவையோ அந்தக் காலத்தில் அதை எமக்கு இயற்கை தரும். அதனை பயன்படுத்துவதே வாழ்வியல் முறை. இதைத்தான் பண்டைக்காலத்தில் பிரெஞ்சியர் கொடுத்த சிறு தோடை உணர்த்தி நிற்கிறது.

இன்று கூட நத்தார் பரிசுகள், இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டாலும் பெரும்பான்மை நத்தார் விருந்து வழங்கப்படும் சிறுதோடையுடனேயே நிறைவுறுவது வாழ்வியலை எமக்கு மேலும் வலியுறுத்துகிறது.

இதை வாசித்து முடித்ததும் “பருவத்தே பயிர் செய்”யச்சொன்ன எங்கள் முன்னோடிகள் ஞாபகத்துக்கு வந்தால் தமிழண்டா என்று பெருமை கொள்ளலாம்.